கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது: விசிக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்று தமிழக அரசிடம் விசிக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி -முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். அதேவேளையில், மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி- முருகேசன் இருவரும் மனமொத்து சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த கண்ணகியின் பெற்றோர் தம்பதியினரைக் கடத்திச் சென்று அவர்களைக் கட்டாயப்படுத்தி நஞ்சைக் குடிக்கவைத்துக் கொடூரமாகப் படுகொலை செய்தனர். சாதிவெறிக் கும்பல் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்கள் முன்னிலையிலேயே குற்றுயிரும் குலையுயிருமாய் தம்பதியை எரித்துச் சாம்பலாக்கினர். இந்தக் கொடூரத்திற்குக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முழு உடந்தையாக இருந்தனர்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு நேற்று (24.09.2021) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியான கண்ணகியின் சகோதரருக்குத் தூக்குத் தண்டனையும், அவரது தந்தை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

2003ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, 18 ஆண்டுகளாக நடைபெற்று இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாமதமான தீர்ப்பு என்றாலும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிவழங்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.

இத்தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். நேர்மையோடு தீர்ப்பளித்த மாவட்ட அமர்வு நீதிபதி அவர்களுக்கும், நீதியை நிலைநாட்டிட உறுதியாகப் பாடுபட்ட வழக்கறிஞர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. 2013 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் 192 ஆணவக்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. கீழமை நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தாலும் மேல்முறையீட்டில் அவர்கள் தப்பித்து விடுகின்றனர். மேல்முறையீடு வழக்குகளில் அரசுத் தரப்பில் போதிய கவனம் செலுத்தாதே அதற்குக் காரணமென தெரிகிறது. எனவே, இவ்வழக்கிலும் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தால் அவர்கள் தப்பிவிடாதபடி உரிய கவனத்துடன் வழக்கை நடத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்’’.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்