உரிய விவரங்கள் இல்லாமல் பதில் மனுத்தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்: உயர் நீதிமன்றம் கண்டனம்

By ஆர்.பாலசரவணக்குமார்

கோயில் நிலம் தொடர்பாக உரிய விவரங்கள் இல்லாமல் பதில் மனுத்தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்குக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இணை ஆணையர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கோயில் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யக் கோயில் தனி அலுவலருக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

அம்மனுவில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதுடன், கோயிலில் இருந்து மாயமான செப்புப் பட்டயத்தைக் கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காணாமல் போன செப்புப் பட்டயம் குறித்தும், கோயிலுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை ஆணையர் தென்னரசு பதில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், காணாமல் போனதாகக் கூறப்படும் செப்புப் பட்டயம், புராதானப் பொருளாக அறிவிக்கப்பட்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், சில நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எத்தனை ஏக்கர் நிலம், யார் யாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது? ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தின் அளவு குறித்த எந்த விவரமும் பதில் மனுவில் தெரிவிக்காத இணை ஆணையருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு உரிய பதில் மனுத்தாக்கல் செய்யாத அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பி, அது தொடர்பாக அவரை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களின் முழுமையான விவரங்களை 2 வாரங்களில் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறை செயலாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

16 mins ago

க்ரைம்

22 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்