மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி முழு அடைப்புப் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

By செய்திப்பிரிவு

ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்துகிற முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் துணையாக இருக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப்.18) வெளியிட்ட அறிக்கை:

"2014 மக்களவைத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இதில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.

விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக விவசாய சங்கங்களையோ, விவசாயிகளையோ, எதிர்க்கட்சித் தலைவர்களையோ கலந்து பேசாமல், தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து, கடந்த 10 மாதங்களாகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராடுகிற விவசாய சங்கங்களை இதுவரை அழைத்துப் பேசுவதற்கு பிரதமர் மோடி தயாராக இல்லை. இதன்மூலம் விவசாயிகள் மீது பிரதமர் மோடி எந்த அளவுக்குக் கடுமையான மனநிலையோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மேலும், மூன்று வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகத்தான் கொண்டு வரப்பட்டன என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற வரையில் எங்கள் போராட்டம் ஓயாது என்ற நெஞ்சுறுதியோடு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக விவசாயிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியுள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மறுக்கிற மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்து மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்குத் துணைபுரிய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அந்த வகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்துகிற முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் பெரும் துணையாக இருந்து ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

ஜோதிடம்

29 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

33 mins ago

சுற்றுலா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்