மாணவர் தற்கொலை கூடாது; நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (செப். 14) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக கல்விச் சூழலுக்கு சற்றும் பொறுத்தமில்லாத, தேவையில்லாத நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. நீட் தேர்வு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக, கனிமொழி தங்களிடம் கூறி வந்ததாகவும், அதனால் நீட் மதிப்பெண் குறைந்து மருத்துவப் படிப்பில் சேர இயலாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

மாணவி கனிமொழி பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 469 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562.5 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். நீட் தேர்வு இல்லாமல் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், மாணவி கனிமொழிக்கு மருத்துவ இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், அதில், தமக்கு போதிய மதிப்பெண்கள் கிடைக்காது என்ற அச்சமும் தான் கனிமொழியை தற்கொலைக்குத் தூண்டியுள்ளன. மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது. நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும்.

அதே நேரத்தில், எந்த ஒரு சூழலையும் எதிர்த்துப் போராடுவதற்கு மாணவர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. ஒருமுறை நீட்டில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், அடுத்த முறை முயன்று வெற்றி பெற வேண்டும்.

அதுமட்டுமின்றி, மருத்துவப்படிப்பு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய உயர்படிப்பு அல்ல. வேலைவாய்ப்பும், சேவை வாய்ப்பும் இன்னும் அதிகமுள்ள ஏராளமான படிப்புகள் உள்ளன. மருத்துவக்கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அதேபோல், இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரும் புதிய சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதை மத்திய அரசு வழியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வு இனி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்