செஞ்சி அருகே 1300 ஆண்டுகால பல்லவர் ஓவியம், சிலை கண்டுபிடிப்பு

By எஸ்.நீலவண்ணன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை ஒட்டிய சஞ்சீவி மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய ஓவியத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் கூறியதாவது:

’’செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தை ஒட்டியுள்ள சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் உள்ள கொற்றவை சிலையை ஆய்வு செய்யச் சென்றபொழுது , அக்கோயிலில் பூஜை செய்யும் விஜயகுமார் அளித்த தகவலின் பேரில் மலை மேல் இருக்கும் நீலகிரி அம்மனை காணச் சென்றோம்.

சீரான பாதைகள் அற்று செங்குத்தாக ஏறும் மலையில் சுமார் 821 அடி உயரத்தில் உள்ள ஒரு தட்டையான பாறையின் மீது பல்லவர் காலத்திய செங்கல் தளியொன்று சிதிலமடைந்த நிலையில் காட்சியளித்தது. அங்கு வடக்கு திசை நோக்கி சுமார் ஐந்தடி சதுர வடிவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த செங்கல் தளியின் முன், பாதி சரிந்து சிதைவுற்றுள்ளது.

சிதிலமடைந்த செங்கல் தளியினுள் விஷ்ணு துர்க்கை சிலையொன்று நீலகிரி அம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. இந்த சிலையைச் சுற்றியுள்ள மூன்று பக்கவாட்டு சுவற்றிலும் பல்லவர் காலத்தில் ஓவியம் வரையப்பட்டு , அவையாவும் அழிந்து காலத்தின் சாட்சியாய் ஓரிரு இடங்கள் மட்டும் நன்றாகத் தெரிகிறது.

உட்புறச் சுவற்றில் மூன்று பக்கச் சுவற்றிலும் சுமார் நான்கடி அகலம் மூன்றடி உயரத்திற்கு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றுள் துர்க்கை சிலைக்குப் பின்புறம் உள்ள தெற்குச் சுவற்றில் சோமாஸ்கந்தர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. ஏனைய இரு பக்கச் சுவற்றிலும் ஓவியங்கள் முற்றிலும் உதிர்ந்த நிலையில், அதன் தடம் மட்டும் வெள்ளைப் பூச்சுடன் காணப்படுகிறது.

எஞ்சியுள்ள சோமாஸ்கந்தர் ஓவியத்தின் பகுதிகள் மற்றும் வண்ணங்கள், காஞ்சி கைலாசநாதர் மற்றும் பனைமலை கோவில்களில் உள்ள ராஜசிம்மன் காலத்திய ஓவியத்தை ஒத்துள்ளதால், இச்செங்கல் தளியில் உள்ள ஓவியம் ராஜசிம்மன் பல்லவன் (கி.பி 700-728) காலத்தியது என்று கருதலாம்.

பல்லவர் காலத்தைச் சேர்ந்த சப்த மாதர் சிலை தொகுப்பு

விஷ்ணு துர்க்கை

அழகிய கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க, நீள்வட்ட முகத்தில் இருகாதுகளிலும் பத்ர குண்டலங்களும், தடித்த உதட்டுடன் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

நான்கு கரங்களில் மேல் இரு கரங்கள் முறையே பிரயோகச் சக்கரமும் , சங்கும் ஏந்தி நிற்கக் கீழ் வலது கரம் அபய முத்திரையிலும் கீழ் இடது கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும் காட்டப்பட்டுள்ளது. அனைத்துக் கைகளிலும் தோள்வளையும் கைவளையும் இடம்பெற்றுள்ளது.

மார்புக் கச்சையுடன் சரிந்த தனங்களும், அணிகலன்களாகக் கண்டிகை மற்றும் சரப்பளியுடன் பருத்த இடையும் , இடையாடை பாதம் வரையும் கால்களில் தண்டையும் அணிந்து கம்பீரமாக நின்றவாறு அருள்பாலிக்கிறது. இச்சிற்ப அமைதியை வைத்துப் பார்க்கையில் இதன் காலம் கி.பி 8-ம் நூற்றாண்டின் முற்பகுதி என்று கருதப்படுகிறது.

காவல் தெய்வமாக

இத்துர்க்கை வடக்கு நோக்கி அமைந்துள்ளதால் ராஜசிம்மன் பல்லவன் காலத்தில் காவல் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் இச்செங்கல் தளி அமைந்துள்ள பாறையின் கீழ்புறத்தில் கருங்கற்களால் ஆன கோட்டைச் சுவர் போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறது. ஆங்காங்கே செங்கற்களும் சிதறி கிடைப்பதை வைத்து இப்பகுதியில் கோட்டை மற்றும் சிறு கோயில்கள் இருந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

இந்தவிஷ்ணு துர்க்கையும் , சுவர்களின் காணப்படும் ஓவியமும் ராஜசிம்ம பல்லவன் என்றழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி 700-728) காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

பல்லவர் கால எச்சங்கள்

மேலும் இவ்வூரின் வடக்கே பல்லவர் காலத்தைச் சேர்ந்த சப்த மாதர் சிலைத் தொகுப்பு கண்டறியப்பட்டது.

நான்கு கரங்களுடன் லலிதாசனத்தில் பிள்ளையாரும், கோடரி மற்றும் பாம்பை கரங்களில் ஏந்தி கபால மாலையுடன் சாமுண்டியும், வஜ்ராயுதம் ஏந்தி மயிலின் மீது கெளமாரியும், சங்கு சக்கரம் ஏந்தி எருமையின் மீது வராகியும் , சங்கு சக்கரத்துடன் வைஷ்ணவியும் , கரண்ட மகுடம் தரித்து அங்குசம் அக்கமாலையுடன் மகேஷ்வரியும், நான்கு முகங்களுடன் பிராமியும், கீர்த்தி மகுடத்துடன் கரங்களில் அங்குசம் தாமரை ஏந்திய நிலையில் இந்திராணியும் அழகுறப் பலகைக் கல்லில் எடுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாலையில் பாதி புதையுண்ட நிலையில் நான்கு கரங்களுடன் வலம்புரி பிள்ளையார் சிற்பமும் காணக்கிடைக்கிறது.

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இவ்வூரில் உள்ள சஞ்சீவி மலையில் காணப்படும் செங்கல் தளியைத் தமிழகத் தொல்லியல் துறை முறையாகச் சீர்செய்து, அதில் எஞ்சியுள்ள 1300 வருடம் பழமையான அறிய ஓவியத்தைக் காத்திட முன்வர வேண்டும்’’.

இவ்வாறு ராஜ் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்