காரைக்கால் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

By வீ.தமிழன்பன்

புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (ஆக.31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் தலைமை வகித்தார். கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், தேசியக்குழு உறுப்பினர் அ.ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அ.மு.சலீம் செய்தியாளர்களிடம் கூறியது “காரைக்கால் பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அரசின் காதுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியான காரைக்கால் பிரதேசம பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், மேகேதாட்டு பகுதியில் அணை கட்டப்படுவதை நிறுத்தும் வகையில் புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை காவல் துறை நிர்வாகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரும் சமூகப் பிரச்சினையாக இப்பகுதியில் உருவெடுத்துள்ளது.

கஞ்சா விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை திறக்கப்பட வேண்டும். நில அபகரிப்பு முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். காரைக்கால் மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரவும் புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் தீவிரமான வகையில் போராட்டம் நடத்தப்படும்.

என்.ஆர் காங்கிரஸ், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் புதுச்சேரி பட்ஜெட் மக்களின் நம்பிக்கையை பொய்த்துப் போகச் செய்துள்ளது. மக்களை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. பஞ்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லப்படவில்லை. எந்தத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்காத பட்ஜெட்டாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஓடிடி களம்

17 mins ago

விளையாட்டு

32 mins ago

சினிமா

34 mins ago

உலகம்

48 mins ago

விளையாட்டு

55 mins ago

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்