தமிழகத்தில் செப்.1-ல் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறப்பு: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (செப்டம்பர் 1 ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (30-8-2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தொற்றின் உயர்வு, நோய்த்தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 28-8-2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை 30-9-2021-வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி, நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்க பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும்:

*ஞாயிற்றுக்கிழமைகளில் (5-9-2021 முதல்) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
*ஏற்கெனவே, அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.
*கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு:

மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் (working men/women hostel) கரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிமாநில மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கட்டாயம்:

தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பொது:

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசு பணியாளர்களுக்கு சமூக பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் / உள்ளாட்சி பொறுப்பாளர்கள் / மருத்துவத் துறையினர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

*கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
*அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
*கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் இப்பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்திட உதவிட வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்