மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: உ.பி. தொழிலாளி பலி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை நாராயணபுரத்தில் 7 கி.மீ., தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் தமிழகத்திலேயே மிக நீளமாகக் கட்டப்படும் பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் 35 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், உத்திரப் பிரதேச தொழிலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

மதுரையிலிருந்து நத்தம் வரை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 28 கி.மீ., தொலைவிற்கு ரூ.1,020 கோடியில் புதிதாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.

இந்தச் சாலையில் நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே தல்லாக்குளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் அடுத்த செட்டிகுளம் வரை ரூ.7.3 கி.மீ., தொலைவிற்கு பிரம்மாண்ட பறக்கும் பாலம் ரூ.679.98 கோடியில் கட்டுமானப் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்தப் பறக்கும் பாலத்தைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் வழிநெடுக 192 பிரம்மாண்டத் தூண்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து நத்தம் வழியாக திருச்சி செல்வதற்குப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், 20 கி.மீ., தொலைவு பயண தூரத்தைக் குறைக்கவும், இந்தப் பறக்கும் பாலமும், நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.

மதுரை மாநகரில் 7.3 கி.மீ., தொலைவிற்கு அமையும் இந்தப் பறக்கும் பாலத்திற்காக 192 தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பறக்கும் பாலத்தில் விஷால் மால், மாநகராட்சி நுழைவு வாயில், திருப்பாலை மின்வாரிய அலுவலகம், நாராயணபுரம் ஆகிய 4 இடங்களில் வாகனங்கள் ஏறி, இறங்கும் வசதியுடன் இணைப்புப் பாலமும் கட்டப்படுகிறது. இந்தப் பாலம் கட்டுமானப் பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பறக்கும்பாலம் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் கீழ் ஒரு பகுதியில் நகரப் போக்குவரத்து எந்தச் சிக்கலும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. அதில் டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தன.

தமிழகத்திலே மிக நீளமான பாலமாகக் கட்டப்படும் இந்தப் பாலம் செக்மென்ட் வகை (segmental type) தொழில்நுட்பத்தில் கட்டப்படும் முதல் பாலமாகக் கருதப்படுகிறது.

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்தப் பறக்கும் பாலத்தில் அதன் வளைவுகள், இடத்தைப் பொறுத்து 35 மீட்டர் இடைவெளியில் பிரம்மாண்டத் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இதில், மதுரை நாராயணபுரத்தில் பிரதான பாலத்தின் இரு புறமும் வானகங்கள் ஏறவும், இறங்கவும் இணைப்புப் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது.

இப்பகுதியில் அமையும் இரு பிரம்மாண்ட இரும்புத் தூண்களுக்கு இடையே 35 மீட்டர் நீளமுள்ள பல நூறு கான்கீரிட் கர்டர் பொருத்தும் பணி நடந்தது. இந்த கான்கீரிட் கர்டர் ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பே பொருத்துவதற்காக பிரம்மாண்டத் தூண்கள் மேலே இருத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்த கான்கீரிட் கர்டரை, பிரம்மாண்டத் தூண்களுடன் நிரந்தரமாக இணைக்கப் பொறியாளர்கள் முன்னிலையில் ஏராளமான தொழிலாளர்கள் ஜாக்கிகளைக் கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இணைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தொழில்நுட்பக் கோளாறால் சரியாக மாலை 5.15 மணியளவில் இரு தூண்களுக்கு இடைப்பட்ட 35 மீட்டர் நீளமுள்ள கான்கீரிட் கர்டர் கீழே சரிந்து விழுந்தது.

இதில் பல நூறு டன் எடை கொண்ட அந்த கான்கீரிட் கர்டர் இரண்டாக பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கான்கீரிட் கர்டர் இடிந்து விழுவதை முன்கூட்டியே கணித்த பாலத்திற்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துரதிர்ஷ்டவசமாக சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் ஒருவர் இறந்துவிட்டார். வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா? என்பதை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸார், தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த இணைப்புப் பாலத்திற்குக் கீழ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் யாரும் சிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்