வைணவத் தலங்களில் கொடியேற்றம்: 2-ம் நாளில் 1.50 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

By கல்யாணசுந்தரம், வி.சுந்தர்ராஜ்

மகாமகப் பெருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வைணவத் தலங்களில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

2-ம் நாளான நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மகாமகக் குளத்துக்கு வந்து நீராடியவண்ணம் இருந்தனர்.

மகாமகப் பெருவிழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம் 6 சைவத் தலங்களில் கொடியேற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து புனித நீராடல் தொடங்கியது.

மகாமகப் பெருவிழா சைவத் தலங்கள் மட்டுமின்றி வைணவத் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சக்கரபாணி கோயிலில் ரதஸப்தமியையொட்டி உள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, சுதர்சனவல்லி, விஜயவல்லித் தாயாருடன் சக்கரபாணி பெருமாள் திருமணக் கோலத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருட முத்திரை பதித்த விழா கொடி, மங்கள வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல, சாரங்கபாணி கோயிலில் கோமளவல்லித் தாயாருடன் சாரங்கபாணியும், ராம சுவாமி கோயிலில் ராமர் சீதாப்பிராட்டியுடனும், ராஜகோபால சுவாமி கோயிலில் ராஜகோபாலர் செங்கமலவல்லித் தாயாருடனும், ஆதிவராகப் பெருமாள் கோயிலில் ஆதிவராகப் பெருமாள் பூமாதேவியுடனும் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அப்போது, கொடிமரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புனித நீராடல் தொடங்கிய 2-ம் நாளான நேற்று ஒன்றரை லட்சம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராடினர். தொடர்ந்து, பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆறு ஆகியவற்றிலும் நீராடியதுடன், சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குச் சென்றும் பக்தர்கள் வழிபட்டனர்.

மகாமகக் கோயில்களில் இன்று...

மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழாவின் 3-ம் திருநாள் - வெள்ளிப் பல்லக்கு உலா, காலை 8, சுவாமி, அம்பாள் பூத வாகனம், இரவு 7.

சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: மாசிமக பிரம்மோற்சவம்- பல்லக்கு, காலை 8, இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 7.

ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்: மாசிமக பிரம்மோற்சவ விழா- 3-ம் நாள் - பல்லக்கு, காலை 8, பூத வாகனம், சிம்ம வாகனம் சுவாமி, அம்பாள் வீதியுலா, மாலை 6.

பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா- பூத வாகனம், கிளி வாகனம், இரவு 7.

விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: மகாமகப் பெருவிழா- பல்லக்கு, காலை 8, பூத வாகனம், கிளி வாகனம், இரவு 7.

ராஜகோபால சுவாமி கோயில்: மகாமக விழா- 2-ம் திருநாள் - வெள்ளிப் பல்லக்கு, காலை 8, வெள்ளி சூரியபிரபை விமானத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.

சக்கரபாணி சுவாமி கோயில்: மாசிமகப் பெருவிழா- 2-ம் நாள் - பல்லக்கு, காலை 8, சந்திர பிரபை, இரவு 7.

சாரங்கபாணி கோயில்: மகாமகப் பெருவிழா- பல்லக்கில் பெருமாள் புறப்பாடு, காலை 8, வெள்ளி சூரிய பிரபையில் புறப்பாடு, இரவு 7.

ராம சுவாமி கோயில்: மகாமகப் பெருவிழா- பல்லக்கு காலை 9, சூரிய பிரபை, இரவு 7.

விழா துளிகள்...

‘வடமாநிலத்தவரும் வர வேண்டும்’

கும்பகோணம் மகாமக குளத்துக்கு நேற்று பிற்பகல் வந்த பாஜக எம்.பி. தருண் விஜய், குளத்தின் வடமேற்கு பகுதியில் இறங்கி குளத்து நீரை தலையில் தெளித்துக்கொண்டு வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “இந்த விழா கும்பமேளா போன்றுதான் உள்ளது. புனித நகரமான கும்பகோணத்துக்கு வடமாநிலத்தவர்களும் வந்து புனித நீராட வேண்டும்” என்றார்.

மாற்று அலைவரிசை

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் செல்போன்களை பயன்படுத்துவதால் அவற்றில் சிக்னல் செயலிழப்பதைத் தவிர்க்க மாற்று அலைவரிசையைப் பயன்படுத்த சென்னை ஐஐடி புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. மேலும், காவல் துறை மற்றும் முக்கிய அலுவலர்கள் 200 பேரின் செல்போன் பயன்பாட்டுக்கென தனி அலைவரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3-வது முறையாக அறிவிப்புப் பணி

காவல் துறையில் பணியாற்றும்போது நடைபெற்ற இரு மகாமக விழாவைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற பின்னர் தற்போது 3-வது முறையாக மகாமகக் குளக்கரையில் காவல் துறையின் அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறார் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அருளானந்தம்(65).

அறநிலையத் துறை உதவிக்கு...

மகாமகக் குளத்தில் உள்ள கூட்ட நிலவரம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோயில்களின் நடை திறப்பு நேரங்கள், விசேஷங்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் வெளியூர் பக்தர்கள் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை (0435 2400333, 2421428, 89032 55324, 89032 55325) தொடர்புகொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் த.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நீராடியதில் மனநிறைவு...

கடலூரைச் சேர்ந்த திருமாலன்பன் (65) ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உடையவர். இவர் ஏற்கெனவே 3 மகாமகங்களில் புனித நீராடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒரு காலை இழந்ததால், ஊன்றுகோல் உதவியுடன் வாழ்ந்து வரும் இவர், 4-வது முறையாக நேற்று கும்பகோணம் வந்து மகாமகக் குளத்தில் இறங்கி யாருடைய துணையும் இல்லாமல் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று மன நிறைவுடன் புனித நீராடினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

29 mins ago

சினிமா

38 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

தமிழகம்

52 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்