வன்னியர் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் அனைத்தும் வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும், இந்த வழக்கின் விவரத்தை இந்தச் சட்டத்தால் பலன் அடைந்தவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (எம்.பி.சி) 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து, 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, அரசியல் லாபத்துக்காகச் சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

1983-ம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனத் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன், "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய சாதிகளை அடையாளம் காண்பது, பட்டியலில் சேர்ப்பது போன்றவற்றுக்குக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக, சட்டம் இயற்ற மாநிலச் சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர், மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் 10.5 சதவீதம் அளிக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு உள்ளதால், கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்க வேண்டும்.

தற்காலிக மாணவர் சேர்க்கை என எதுவும் இல்லாததால், இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 20 சதவீதத்தையே பின்பற்ற வேண்டும். பணி நியமனத்தைப் பொறுத்தவரை, வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், "ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முயற்சி நடந்துள்ளதால், ஆரம்ப நிலையில் தடை உத்தரவு கோர முடியாது எனக் கூற முடியாது. சில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. மற்ற நிறுவனங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. ஆகையால், இடைக்காலத் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

அதே நேரத்தில், 10.5% சட்டத்தால் பலன் அடைந்தவர்களுக்கு இந்த வழக்கு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது. இறுதி விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்குத் தள்ளிவைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்