புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட்

By வீ.தமிழன்பன்

புதுச்சேரியில் எக்காரணம் கொண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை ஒத்திவைக்கக் கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஆக.24) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் தலைமை வகித்தார். கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், தேசியக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அ.மு.சலீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காரைக்காலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ஆற்றிய உரையில் எந்தவொரு புதிய திட்டமும் சொல்லப்படவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் புதிய மக்கள் நலத்திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 50 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 12 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இது மிக மிகக் குறைவு. தடுப்பூசி திட்டம் சரியாக இங்கு செயல்படுத்தப்படாதது அபாயகரமானது.

மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் பிரதேசம் பாலைவனமாகும். ஆனால், அந்த அணை கட்டும் திட்டத்துக்கு எதிராகத் தமிழகத்தைப் போல புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தேசிய பசுமை தீர்ப்பாய நடவடிக்கையை எதிர்த்து புதுச்சேரி அரசு எதுவும் செய்யவில்லை. எனவே, அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தி காரைக்காலைக் காப்பாற்றும் வகையில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் காரைக்கால் மிக மோசமான நிலையில் உள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லை. புதுச்சேரியை ஒப்பிடும்போது காரைக்காலில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. வீடற்றவர்களும் அதிகம் உள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

புதுச்சேரியில் அரசுத் துறைகளில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் சொன்னார். ஆனால், நிதி நெருக்கடி உள்ளதால் அவ்வளவு எளிதாகப் பணியிடங்களை நிரப்ப முடியாது என பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியுள்ளார். ஆக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளை இணைத்து ஒரு டெக்ஸ்டைல் பார்க் உருவாக்கி பஞ்சாலைத் தொழிலை மேம்படுத்த முடியும். இதனால் 50 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்ற ஆலோசனையை இந்தியக் கம்யூனிஸ்ட் முன்வைக்கிறது. அரசு இதனைக் கருணையோடு பரிசீலிக்க வேண்டும்.

காரைக்காலில் கஞ்சா புழக்கம், நில மோசடி போன்றவை அதிகரித்து வருகின்றன. காரைக்கால் மாவட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வரும் 31-ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டம் காரைக்காலில் நடத்தப்படவுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்குத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை. கரோனா 3-வது அலையைக் காரணம் காட்டித் தள்ளிப்போட நினைக்கிறார்கள். இந்தச் சூழலில் உலகின் பல இடங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் ஒருபோதும் தேர்தலை ஒத்திப்போடக் கூடாது".

இவ்வாறு சலீம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்