கிரீமிலேயர் வரம்பு; வேளாண் வருமானம், சம்பளத்தைக் கணக்கில் சேர்க்கக் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கிரீமிலேயர் வரம்பில் வேளாண் வருமானம், சம்பளத்தைக் கணக்கில் சேர்க்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 03) வெளியிட்ட அறிக்கை:

"தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்திவிட்டு, அதில் வேளாண்மை வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் சேர்க்கும் பழைய திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த திட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது; இது மாற்றப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சாதி அடிப்படையிலான சமூக நிலைதான் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படை என்பதால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், சமூக நீதி தத்துவத்துக்கு முற்றிலும் எதிராக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் சொல்லப்படாத கிரீமிலேயர் தத்துவத்தை இந்திரா சகானி வழக்கில் உச்ச நீதிமன்றம் திணித்தது. அதன்படி, வேளாண் வருமானம், சம்பளம் ஆகியவை இல்லாமல், பிற ஆதாரங்களிலிருந்து ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

இன்றைய நிலையில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்களாகக் கருதப்பட்டு, அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோருக்கு மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதை உடனடியாக ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கிரீமிலேயர் வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், கிரீமிலேயரைக் கணக்கிடுவதில் வேளாண் வருமானத்தையும், சம்பளத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற பி.பி. சர்மா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு இன்னும் நிராகரிக்கவில்லை; அது இன்னும் மத்திய அரசின் ஆய்வில் இருக்கிறது என்று தெரிகிறது. இது உண்மையாக இருக்குமானால் அது ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை கடுமையாக பாதிக்கும்.

கிரீமிலேயர் வரம்பை தீர்மானிப்பதில் வேளாண் வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் கணக்கில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செய்திகள் வெளியானபோது, அதைக் கடுமையாக எதிர்த்து 21.02.2020 அன்று நான்தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். பிற கட்சிகளும் இதை எதிர்த்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதன்பின்னர், கிரீமிலேயர் வரம்பைத் தீர்மானிப்பதில் வருமான வரிக்கு கணக்குக் காட்டப்படும் வருமானம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்; வேளாண் வருமானம் சேர்க்கப்படாது என்று மத்திய அரசு கூறியது. பிற பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், கிரீமிலேயர் வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்; வேளாண் வருமானமும், சம்பளமும் சேர்க்கப்படக் கூடாது என்று பரிந்துரைத்தது.

ஆனால், அதை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. மாறாக, கிரீமிலேயர் வரம்பைத் தீர்மானிப்பதில் சம்பளம், வேளாண் வருமானத்தைச் சேர்ப்பதற்குப் பரிசீலிப்பது நியாயம் ஆகாது.

கிரீமிலேயர் வரம்பு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம், சர்மா குழுவின் அபத்தமான பரிந்துரைகள் தான். கிரீமிலேயர் குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட, அக்குழுவின் பரிந்துரைகள் புதிய பிரச்சினைகளை எழுப்புவதையும், ஓபிசி இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்படுவதற்குத் துணை போவதையும் அனுமதிக்க முடியாது. சர்மா குழு பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும்.

மண்டல் ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போதுதான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பல நேரங்களில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் கிரீமிலேயரைக் காரணம் காட்டி, தகுதியான ஓபிசிக்கள் நிராகரிக்கப்படுகின்றனர். பின் அந்த இடங்கள் உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு இப்போது செயல்படுத்தப்படவிருக்கும் திட்டத்தால், இத்தகைய அநீதிகள் அதிகரிக்கும்; ஓபிசி இட ஒதுக்கீடு மறைமுகமாக மறுக்கப்படும்.

கிரீமிலேயர் வரம்பு ரூ.16 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்; அதில் சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை சேர்க்கப்படக் கூடாது என்பதுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாடு ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் குறித்து முடிவெடுக்கும்போது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும்.

எனவே, கிரீமிலேயர் வரம்பை நிர்ணயிப்பதில் வேளாண் வருமானமும், சம்பளமும் சேர்க்கப்படாது என்றும், கிரீமிலேயர் வரம்பு 15 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்களில் முழுக்க முழுக்க சமூக நீதியில் அக்கறை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்