சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை: பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறக்கிறார்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, கடந்த 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப்படத்தை பேரவையில் திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 2-ம் தேதி விழாவுக்கு தேதி கொடுத்தார். இதையடுத்து, விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. பேரவைத் தலைவர் அப்பாவு டெல்லி சென்று, குடியரசுத் தலைவரிடம் அழைப்பிதழை கொடுத்து முறைப்படி விழாவுக்கு அழைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத் தலைவர், மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வருகிறார். 5 மணிக்கு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், பேரவை அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். பேரவை அரங்கில் பேரவைத் தலைவர் இருக்கையின் இடதுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையின் பின்புறம் கருணாநிதியின் படம் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி பேரவை அரங்கம் அமைந்துள்ள தலைமைச் செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை வாயில்,கொத்தளப்பகுதி, போர் நினைவுச் சின்னம்முதல் தலைமைச் செயலகம் வரையிலான காமராஜர் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, தலைமைச் செயலகத்துக்குள் நேற்று மாலை முதலே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எதிர்புறம் உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில்வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலக பணியாளர்கள் இன்று பகல் 1 மணிக்குமேல் பணியை முடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விழா முன்னேற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்றது.

இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார். சூலூர் விமானப்படை தளத்தில் இறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவனில் 6-ம் தேதி வரை ஓய்வெடுக்கிறார். இடையில், ஒருநாள் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியை பார்வையிடுகிறார். ஆக.6-ம் தேதி அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளம் வந்து, விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அழைப்பிதழ் கட்டாயம்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்போருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், அதை கொண்டுவருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்கு விழாதொடங்கும் நிலையில் 4 மணிக்கே அனைவரும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, விழாவில் பங்கேற்க உள்ள பத்திரிகையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்