பெகாசஸ் பிரச்சினையை விவாதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் வேறு விவாதத்துக்கு வாய்ப்பு இல்லை: கனிமொழி எம்.பி. உறுதி

By எஸ்.கோமதி விநாயகம்

பெகாசஸ் பிரச்சினையை விவாதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் வேறு விவாதத்துக்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி. உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் பசுமை வீடு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.1.80 லட்சத்தில் வீடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, வீடுகளை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார். அங்கு ரூ.3.5 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து, ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும், அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.19.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இலங்கை அகதி முகாம் சுய உதவிக்குழுவுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.50 ஆயிரம், 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

உழைக்கும் மகளிர் 30 பேருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் பிச்சையா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் முருகவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், பொதுப்பணித்துறை உதவி கோட்ட செயற் பொறியாளர் (மின்வாரிம்) ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பாஜகவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயத்திலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள். பெகாசஸ் என்பது மிகப்பெரிய பிரச்சினை. வெளியே எந்தப் பிரச்சினையையும் நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய பாஜக அரசு, நாடாளுமன்றத்துக்குள் அதனை விவாதிக்கத் தயாராக இல்லை.

இது நாட்டுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. வெளியே ஒன்றும், உள்ளே ஒன்றும் என ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நிலைப்பாடு எடுப்பதால் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதே பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார். ஆனால், இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதுதான் அவர்களின் உண்மையான முகம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் உள்ளோம். ஏனென்றால் கரோனா தொற்று குறித்து பேச வேண்டிய நிலை உள்ளது.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

அந்த மசோதா குறித்து விவாதிக்கக் கூறியுள்ளோம். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் வேண்டும் என கேட்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு.

பத்திரிகையாளர்களின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. யாரை வேண்டுமானாலும் அரசு நினைத்தால், அவர்களது மடிக்கணினி, கணினி அல்லது செல்போன் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து வைத்து, அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை இது.

யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் இதே நிலை தான். சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியலில் இருக்கக்கூடியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும்போது, அதனைப் பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது. தயாராக இல்லை என்று ஏன் சொல்கிறது.

இதனை விவாதிக்கக் கோரி அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால், அதனை எடுத்து அவர்கள் விவாதிக்கத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கான வாய்ப்பும் இல்லை. அதனால் தவறு என்பது அரசாங்கத்தின் மேல் தான் உள்ளது. அவர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். அதை செய்யக்கூட அவர்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

3 hours ago

இந்தியா

19 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்