முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்: முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் உடல் மதுரையில் அரசு மரியாதையுடன் அடக்கம்

By என்.சன்னாசி

முதுபெரும் தமிழறிஞா் புலவர் ரா.இளங்குமரனார் (94) மதுரையில் நேற்றுஇரவு காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த இளங்குமரனார், தொடக்கத்தில் கரிவலம்வந்தநல்லூர் அரசுப் பள்ளியிலும், இதையடுத்து மதுரை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை முழுமையாக பதிப்பித்து வெளியிட்டுள்ள இவரது திருக்குறள் கட்டுரைத் தொகுப்பை 1963-ல் அப்போதைய பிரதமா் நேரு வெளியிட்டுள்ளார்.

’சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு' எனும் நூலை அப்துல்கலாம் வெளியிட்டுள்ளார். ’எங்கும் பொழியும் இன்பத் தமிழ்’ உட்பட 600-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர்.

திருச்சியை அடுத்த அல்லூா் பகுதியில் ’திருவள்ளுவா் தவச்சாலை’ என்ற தமிழ் ஆராய்ச்சிக் கூடம் நடத்தி வந்தார். இதுதவிர, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், ’செந்தமிழ்’ மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். தமிழக அரசின் திருவிக விருது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்செம்மல் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு இளங்கோ, பாரதி என்ற இரு மகன்களும், கலைமணி, திலகவதி ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.

மதுரை திருநகரில் வசித்து வந்த இளங்குமரனார் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் நேரில் சென்று இளங்குமரனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விளாச்சேரி மயானத்தில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்

இளங்குமரனார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ் மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர்.

அவரது உடை போலவே உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்போல என்றென்றும் இளங்குமரனாரின் இறவாப் புகழ் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ”தமிழறிஞரும், தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தனித்தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பல இயக்கங்களை நடத்தியவர். அதற்காகப் பெரும் பங்களித்தவர்” என்று கூறியிருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”ஆண்ட தமிழுக்கு அழிவு உண்டோ? மீண்டும் தமிழின் பொற்கால ஆட்சியைக் கொண்டு வருவோம் எனச் சூளுரைத்து, அதற்காக தம் வாழ்நாள் முழுமையும் அலைந்து திரிந்து, நூல்களைத் தேடிப்பிடித்து அச்சிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்த இளங்குமரனாரின் புகழ் நீண்டு வாழும்” என தனது இரங்கலைப் பதிவு செய்திருந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், "நம் மத்தியில் மிக மூத்த தமிழறிஞராக வலம் வந்து தமிழின் சிறப்புகளை தனது எழுத்தாலும், பேச்சாலும் அனைவருக்கும் ஊட்டினார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்" எனக் கூறியிருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இளங்குமரனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்