ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியது

By செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், அருவிக்கு செல்லும் நடை பாதை தண்ணீரில் மூழ்கியது.

கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் அதே அளவு தொடர்ந்தது.

இதனிடையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநில அணைகளில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட உபரிநீர் நேற்று முற்பகலில் ஒகேனக்கல் வரத் தொடங்கியது. தொடர்ந்து நீர்வரத்து சீராக அதிகரிக்கத் தொடங்கியது.

நேற்று காலை 11 மணியளவில் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து, பகல் 2 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 25 ஆயிரம் கனஅடிக்கும் மேல் அதிகரித்தது. இது இந்தாண்டின் அதிகபட்ச நீர்வரத்தாகும்.

மேலும், நீர்வரத்து இன்று (25-ம் தேதி) காலைக்குள் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை நீரில் மூழ்கியது. மேலும், பிரதான அருவி, சினிபால்ஸ் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதையடுத்து, தருமபுரி மாவட்ட காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளை வனம் மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு துறையினர் தொடர் கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூருக்கு இன்று தண்ணீர் வரும்

மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6 ஆயிரத்து 841 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 72.55 அடியாகவும், நீர் இருப்பு 34.93 டிஎம்சி-யாகவும் இருந்தது.

இதனிடையே கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலைக்குள் மேட்டூர் அணைக்கு வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு நாளை (இன்று) மாலைக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

14 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

21 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்