3 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது; அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 6 மாத குழந்தை உட்பட 10 பேர் பத்திரமாக மீட்பு

By செய்திப்பிரிவு

அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி உயிருக்குப் போராடிய 6 மாத குழந்தை உட்பட 10 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகில், 5 மாடிகளைக் கொண்ட தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் 3-வது மாடியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனமும், 4-வது மாடியில் கல்வி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 11.45 மணியளவில் 3-வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

இதைப் பார்த்த வணிக வளாகத்தின் காவலாளி, உடனடியாக தரை தளத்தில் இருந்த மின் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து அதிகஅளவில் புகை வெளியேறியதால், அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் வணிக வளாகம் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே, 3-வது மாடியில் தீ வேகமாகப் பரவியது. அங்கிருந்த பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் மரண பயத்தில் கூச்சலிட்டனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால், அங்கிருந்த ஜன்னல் அருகில் வந்து நின்று ‘காப்பாற்றுங்கள்’, ‘காப்பாற்றுங்கள்’ என அபயக் குரல் எழுப்பினர். தீயால் ஏற்பட்ட கரும்புகை 4-வது மாடிக்கு பரவ ஆரம்பித்ததால், அங்கிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயத்தில் அலறியடித்து, பின்பக்கத்தில் இருந்த மாடிப்படிகள் வழியாக கீழே இறங்கினர்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி, எழும்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ‘ஸ்கை லிப்ட்’ ராட்சத வாகனமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. 3-வது மாடியில் ஜன்னலின் ஓரத்தில் நின்று அபய குரல் எழும்பியவர்களை மீட்பதற்காக, தீயணைப்பு வீரர்கள் ‘ஸ்கை லிப்ட்’ ராட்சத வாகனம் மூலம் 3-வது தளத்துக்கு சென்றனர்.

அங்கு ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த 6 மாத கைக்குழந்தை மற்றும் 7 பெண்கள் உட்பட 10 பேரை பத்திரமாக கீழே இறக்கினர். அங்கு ஏற்கெனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கட்டிடத்துக்குள் வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கண்காணித்தவாரே, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்ததால், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் அண்ணா சாலைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் காலியாகக் கூடிய சூழ்நிலை உருவானது. சுதாரித்து கொண்ட தீயணைப்பு வீரர்கள் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்தனர்.

முதலில் 7 லாரிகளில் தண்ணீர் வந்த நிலையில், அது காலியானதால், மீண்டும் 6 லாரிகளில் தண்ணீர் வரவழைக்கப்பட்டது. 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து தீ விபத்து நடந்த பகுதிக்கு சென்று, யாரேனும் உள்ளே சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் சோதனை நடத்தினர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்