ஸ்டாலின் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை; எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ்

By செய்திப்பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது, ஸ்டாலின் அரசினுடைய பழிவாங்கும் நடவடிக்கை என, ஓபிஎஸ் - ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை 22) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

"தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, அதன்மூலம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழக மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக, அதிமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்திலே வழக்கை எதிர்நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திராணியில்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியைப் பெற்றிருக்கிற திமுக அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.

அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். அதிமுக இதுபோன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில், அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்".

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

13 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்