சென்னை நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கரையை பலப்படுத்த ரூ.2,500 கோடியில் திட்டம்: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கரைகளை பலப்படுத்தி பராமரிக்கவும் ரூ.2,500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகள் ஆணையர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நீர்நிலைகளின் கரைகளில் கான்கிரீட் போடப்பட்டது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். பணிகள் முடிந்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது. இனி குளங்களின் கரைகள் மண்ணால் மட்டுமே அமைக்கப்படும். சென்னையில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க, தானாக சென்று நதியில் கலக்கும் வகையில் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்தும், சில இடங்களில் குழாய்கள் மூலம் அந்த வழித்தடங்களை இணைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலக்கும் 330 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் கால்வாயில் விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் கால்வாய்களின் கரைகளை பலப்படுத்தி மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம் ரூ.2,500 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் நிதி பெற்று, குடிநீரை நல்ல முறையில் வழங்குவதுடன், மழைநீர் தேங்காமலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். பக்கிங்காம், கூவம், அடையாறு நீரை சுத்தப்படுத்தி கொசு இல்லாமல் செய்வது முதல் பணியாகும். வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது 2-வது திட்டப்பணியாகும். திட்டப்பணிகளை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பார்.

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாநகராட்சி வார்டுகளில் ஒரே அளவு வாக்காளர்கள் வரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் 5 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றுவார்கள். தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட வாக்காளர்கள் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்