தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள்தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா நோய்த் தடுப்பூசியினைக் கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும், படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று எங்கள் அரசின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிவித்தது.

அப்போது, தமிழ்நாட்டில் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று தமிழக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தினர். எனவே, மக்களின் அச்சத்தைப் போக்க நானும், அரசில் இருந்த அமைச்சர்களும், அரசு மருத்துமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

எனினும் அன்றைய எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடையே எழுப்பிய அச்ச உணர்வினால் எதிர்பார்த்த அளவு தமிழ்நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. அதிமுக அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், பாதிப்புகள் மற்றும் இறப்புகளைத் தெரிவிப்பதிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டது.

மேலும் தற்போது, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக அளவில் முன்வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்றது. பிறகு தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார்கள்.

அங்கு கரோனா தடுப்பு மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி ஒன்றை அளித்து, அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், தமிழ்நாடு அரசே வெளிச் சந்தையில் தடுப்பு மருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது. இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறென்ன செய்தது இந்த அரசு?

சரியான முறையில் திட்டமிடாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பு மருந்து எவ்வளவு பேருக்குத் தேவைப்படும்? அதில் எத்தனை பேர் இணை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? யாருக்கு முதலில் அளிக்க வேண்டும்? என்ற திட்டமிடல் இல்லை. எனவே, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி வந்த உடனேயே, அதன் உண்மைத் தன்மையை உணராமல், தடுப்பூசி மையங்களில்அதிக அளவு பொதுமக்கள் விடியற்காலை முதலே கூடிவிடுகின்றனர்.

இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. கூடுகின்ற மக்களிடையே, தடுப்பூசி எண்ணிக்கை குறித்த உண்மையைக் கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி கடமையில் இருந்து திமுக அரசு தப்பித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதைத் தவிர்க்க, கடந்த 15 நாட்களாகத் தொற்று எண்ணிக்கையையும், இறப்பையும் திமுக அரசு குறைத்துக் காட்டுவதாகச் செய்திகள் வருகின்றன.

இந்த அரசு முறையாக மக்களுக்குத் தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாகச் செய்திகள் வந்தன. ஆனால், அவை முறையாக மக்களுக்குச் செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. கடந்த 13-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தை செல்வத்தை தேய்க்கும் படை’ என்ற குறளின் பொருளை உணர்ந்து இந்த அரசு செயல்பட வேண்டும். இதன் பொருள், ``ஆள்வோன் கொடுங்கோன்மையால் மிகவும் துன்பப்பட்டு, அது பொறுக்கமாட்டாது குடிமக்கள் அழுது பெருக்கும் கண்ணீர் அல்லவோ அரசின் செல்வத்தை, நாட்டின் செழிப்பைக் குறைத்து அழிக்கின்ற கருவியாகும்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், இரண்டு மாதங்கள் கடந்த பின்னும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காகப் பரிதவிக்கிறார்கள். கோவாக்சின் மருந்து போட்டவர்கள் அதே மருந்தைப் போட வேண்டும் என்றும், கோவிஷீல்டு மருந்து போட்டவர்கள் அதே மருந்தைப் போட வேண்டும் என்றும், இவை இரண்டும் பல தடுப்பூசி போடும் மையங்களில் இருப்பில் இல்லை என்றும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, கரோனா தடுப்பு மருந்து விஷயத்தில், மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும். மத்திய அரசால் தமிழ்நாட்டிற்குக் கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்குப் போடப்பட்டது?

இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

49 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்