விடுமுறை நாட்களில் தீவிரம்: ஊரடங்கு அமலாக்கக் குழு அமைத்துக் கண்காணிக்கும் சென்னை மாநகராட்சி

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான ஊரடங்கு அமலாக்கக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கோவிட் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில், பொதுமக்கள் அதிகம் கூடுவதாக மாநகராட்சியின் கவனத்துக்குத் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் சார்பில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில், அதிகப்படியான மண்டல அமலாக்கக் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை (10.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) ஆகிய இரு தினங்களில் புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மட்டும் ரூ.5,43,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல் 15.07.2021 வரை கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 6,668 நிறுவனங்களிடமிருந்தும், 3,208 தனிநபர்களிடமிருந்தும் ரூ.3,35,06,790 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,013 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 52 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,00,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை (17.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (18.07.2021) ஆகிய இரு தினங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 5 மண்டல அமலாக்கக் குழுக்கள் பிற மண்டலங்களிலிருந்து கூடுதலாகப் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

4 mins ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்