கொல்லிமலையில் இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி: ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா விருது வழங்கி கவுரவிப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை மூலிகை வளம் நிறைந்த மலைப்பகுதி. கொல்லிமலையில் விளையும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இயற்கை உரங்களை பயன்படுத்துவது இதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் என்.இளங்கோ கொல்லிமலை செம்மேட்டில் உள்ள தனது தோட்டத்தில் இயற்கை முறையில் மிளகு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்டவற்றை விளைவித்து வருகிறார்.

குறிப்பாக ஏலக்காய் இயற்கை சாகுபடி முறையில் விளைவித்ததுடன் அதிக மகசூல் எடுத்ததற்காக கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா என்ற மத்திய அரசு நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் என்.இளங்கோ கூறியதாவது:

கொல்லிலையில் 24 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் இயற்கை சாகுபடி மேற்கொண்டு வருகிறோம். எஸ்டேட்டில் காபி, ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்டவை ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் விவசாயம் செய்கிறோம்.

இதில், 6 ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்கிறோம். முற்றிலுமாக இயற்கை உரங்களை மட்டுமே கொண்டு விளைவிக்கப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 975 கிலோ மகசூல் எடுத்துள்ளோம். இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்த மசாலா பொருட்களுக்கான விருதுக்கு, ஈரோட்டில் உள்ள ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா கிளை அலுவலகம் மூலமாக விண்ணப்பித்தோம்.

இதையடுத்து கொல்லி மலை வந்த தேர்வு குழுவினர், ஏலக்காய் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்று இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து 2020-2021 ஆண்டுக்கான விருது இந்திய அளவில் எங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஏலக்காய் மட்டுமல்ல காபி, மிளகு, கிராம்பு உள்ளிட்ட அனைத்தும் இயற்கை உரங்களைக் கொண்டு சாகுபடி செய்கிறோம்.

தோட்டத்தில் காங்கேயம் ரகத்தைச் சேர்ந்த 14 நாட்டு மாடுகள் வளர்க்கிறோம். இதன் சாணம், கோமியம் போன்றவை உரங்களாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கர் ஏலக்காய் நடவு செய்ய ரூ.3 லட்சம் வரை செலவு பிடிக்கும். நடவு செய்த 3 ஆண்டு முதல் நமது பராமரிப்பை பொறுத்து 15 அல்லது 20 ஆண்டுகள் வரை மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தொழில்நுட்பம்

8 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்