தீவிரமடையும் அவிநாசி - அத்திக்கடவு திட்டப் போராட்டம்

By கா.சு.வேலாயுதன்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மழைக் காலங்களில் நிரம்பி வழியும்போது அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் திறந்து விடப்பட்டு, உபரி நீர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை அடையும். அணை நிரம்பும்போது, உபரி நீர் காவிரி ஆற்றில் விடப்படுகிறது. காவிரியில் செல்லும் நீர், வீணாக கடலில் கலக்கிறது.

இப்படி ஆண்டுதோறும் கடலில் சென்று கலக்கும் தண்ணீரின் அளவு குறைந்தபட்சம் 30 டி.எம்.சி. என்று புள்ளிவிவரம் அளிக்கின்றனர் நீரியல் நிபுணர்கள். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை பில்லூர் அணையின் மிக அருகே உள்ள அத்திக்கடவு என்னுமிடத்திலிருந்து கால்வாய்கள் வெட்டி கொண்டு சென்றால் இங்கு காய்ந்து கிடக்கும் குளம் குட்டைகளை நிரப்பி விடமுடியும். இதன்மூலம் நிலத்தடி நீரும் உயரும். இதுதான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.

1956-ல் காமராஜர் ஆட்சியின்போது இத் திட்டத்துக்கு ரூ.132 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1800 கோடிக்கு மேல் செலவாகும் என அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆய்வு நடத்தி கால்வாய்கள் வெட்ட நடப்பட்ட குறியீட்டுக் கற்கள் பல ஆண்டுகளாக ஆங்காங்கே புதர்மண்டிக் கிடக்கின்றன. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1400 அடி உயரத்தில் உள்ள பகுதிகள் செழிக்கும். குறைந்த அளவே பருவமழை பெய்யும் பகுதிகளாக கருதப்படும் காரமடை, அன்னூர், அவிநாசி, திருப்பூர் வடக்குப் பகுதி, பவானிசாகர், பெருந்துறை, ஈரோடு வடக்கு, சென்னிமலை, கீழ்பவானி டவுன், குன்னத்தூர் என இதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பசுமை திரும்பும்.

இப் பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்ந்து கிடக்கும் 70-க்கும் மேற்பட்ட குளங்கள், 529 குட்டைகள் நிரம்பும்.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு சுமார் 35 லட்சம் மக்கள் குடிநீர் வசதியை பெறுவர். 35,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும் என்கின்றனர் இப் பகுதி மக்கள். தற்போது நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழே சென்று பல நூறு பாசனக் கிணறுகள் வற்றிவிட்டதாகவும், ஆழ்துளை கிணறு அமைத்த பலர் கடன்பட்டு அவதிப்படுவதாகவும் கூறுகின்றனர் விவசாயிகள்.

இப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊராட்சி நிர்வாகங்களும் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்சாரம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்து கடும் நிதி நெருக்கடியிலும், தண்ணீர் பற்றாக்குறையிலும் தவிக்கின்றன என்கின்றனர் ஊராட்சித் தலைவர்கள்.

இத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அவிநாசியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடுவெட்டிபாளையம் பகுதியில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதே நிலை அடுத்தடுத்த கிராமங்களிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு போராட்ட வடிவம் மேலும் சூடு பிடிக்கும் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் கூறும்போது, ‘இந்த திட்டத்தை அமல்படுத்தக்கோரி இதற்கு முந்தைய தேர்தல்களில் 1000 பேர் மொட்டையடித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆயிரம் பேர் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட மனு செய்யப்பட்டது. இப்படி பல்வேறு நூதனப் போராட்டங்கள் நடத்தியும், மாறி, மாறி வந்த அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்த தேர்தலில் போராட்டம் தீவிரமாகும்’ என்றனர்.

‘1000 கிராமங்களில் தலா 2 பேர்’

இத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னூரில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகள் அளித்துவிட்டு ஏமாற்றி விட்டது. நல்ல பதிலை அரசு அளிக்கத் தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரம் கிராமங்களில், கிராமத்துக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டு காலவரையற்ற உண்ணா நிலை போராட்டங்கள் நடத்த தயாராகி வருகிறோம் என்றனர் போராட்டத்தில் ஈடுபட்டோர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்