நீட்; ஊகத்தின் அடிப்படையில் விளம்பர நோக்கில் பாஜக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

By செய்திப்பிரிவு

''நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் குழுவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரர் மாணவரோ, பெற்றோரோ கிடையாது. இந்நிலையில் அரசியல் கட்சியின் நிர்வாகியான கரு.நாகராஜன் எப்படி வழக்கைத் தொடர முடியும்? இது ஒரு விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு'' என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் ஜூன் 29 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். இந்த வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், வழக்கில் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என மாணவி நந்தினி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கல்வியார் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் நிலையில், வழக்கு குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இன்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது. தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பதில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டதன் மூலம் மனுதாரர் நாகராஜனின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மனுவில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

குழுவின் அறிக்கை அரசின் நடவடிக்கை குறித்து ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரசியல் கட்சியைச் சேர்ந்த இவர், இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பது பற்றி மனுவில் குறிப்பிடவில்லை. இதுவரை குழுவிற்கு 84,343 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நீட் பாதிப்பு குறித்து பெற்றோர், மாணவர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மனுதாரர் மாணவரோ, பெற்றோரோ கிடையாது. இந்நிலையில் அரசியல் கட்சியின் நிர்வாகியான இவர் எப்படி வழக்கைத் தொடர முடியும். இது ஒரு விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர், சம்பந்தப்பட்டவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கமிட்டி அமைக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாசனத்தின் எந்த விதியும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறவில்லை. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

அதற்கு முன்பாகவே முன்கூட்டியே இந்த வழக்கை நாகராஜன் தொடர்ந்துள்ளார். ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆகவே, நாகராஜன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்