முதல்வரின் தீவிர முயற்சியினால் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி விரைவுபடுத்தப்படும்: மா.சுப்பிரமணியன் உறுதி

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வரின் தீவிர முயற்சியினால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி விரைவுபடுத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஜூலை 01) சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பசுமை சைதைத் திட்டத்தின்கீழ் 95,001-வது மரக்கன்றை நட்டார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையினால், இதுவரை தமிழகத்திற்கு வரப்பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,50,26,550. இத்தடுப்பூசிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இரண்டு, மூன்று நாட்களுக்கு தடுப்பூசி இல்லாமல் ஆகிவிடும் என்ற நிலையில், மத்திய அரசிடம், முதல்வர் பேசியதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், மத்திய அரசு உயரதிகாரிகளிடம் பேசியதால், மத்திய அரசு சுகாதார அமைச்சகத்திடமிருந்து வந்த ஒப்புதலின்படி அவசரத் தேவைக்காக சென்னை பெரியமேட்டில் உள்ள இந்திய அரசின் மருந்துகிடங்கிலிருந்து 2.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நேற்று பெறப்பட்டுள்ளன.

ஜுலை மாதத்திற்கு முதல்ட்டமாக இன்றைக்கு 1,36,610 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. ஜுலை மாதத்திற்கான தொகுப்பு 71 லட்சம் தடுப்பூசிகள் ஆகும். இவை தடை இல்லாமல் அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்தனுப்பப்பட்டு செலுத்தப்படவிருக்கிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ஆம் ஆண்டு பிப்.28 ஆம் நாள் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 2018 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையும் இடம் தெரிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17அன்று மத்திய அரசின் சார்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் ரூ.1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். 11 மாதங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிதியை கடனாகப் பெறுவதற்கு ஜே.ஐ.சி.ஏ (JICA) நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதியை ஒப்பந்தம் செய்வதற்கே 6 ஆண்டுகள் விரயம் செய்யப்பட்டுள்ளது.

மே-7க்கு பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தினார்கள். ஜுன் 14, அன்று நேரில் சென்று பிரதமரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதங்களிலேயே எய்ம்ஸ் அமைவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால், தொலைக்காட்சியில், ஏதோ தமிழக அரசுதான் காலம் தாழ்த்துவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

4-6-2021 அன்று மத்திய அரசிடமிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக மூன்று நிபந்தனைகளை சொல்லியிருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி முடியும் வரை ஒன்று, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்களை மருத்துவம் பயில அறிவுறுத்தல். இரண்டாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் அல்லாத கலைக்கல்லூரியில் சேர்ப்பது, மூன்றாவது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அந்த 150 மருத்துவ மாணவர்களை சேர்த்து மருத்துவம் பயிலலாம் என்று மூன்று நிபந்தனைகளை அறிவுறுத்தியிருக்கிறது.

இது குறித்து, தமிழக அரசு மருத்துவ வல்லுநர்களுடன் ஆராய்ந்து மத்திய அரசுக்கு முடிவு அறிவிக்கப்படும். இந்த மூன்று விஷயங்களுமே சாத்தியமில்லாதது, ஏனென்றால், ஜிப்மரில் சேர்ப்பதென்பது பக்கத்து மாநிலத்தில் போய் மாணவர்களை சேர்த்தால் சாத்தியப்படாதது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 250 மாணவர்கள் படித்துக்கொண்டுள்ளனர். அவர்களோடு, இந்த 150 மாணவர்களும் சேர்ந்தால், 400 மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற நிலையாகிவிடும். அதற்கான மருத்துவக் கட்டடமைப்பு அங்கு இல்லை. அதேபோல், கலைக்கல்லூரியிலும் மருத்துவ மாணவர்களை சேர்த்து பயில வைப்பது என்பது சரியான விஷயம் கிடையாது.

ஆனால் மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் என்ற அளவில் 150 மாணவர்களை மருத்துவம் பயில அனுமதிக்கலாமா? அல்லது தூத்துக்குடி, திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 30 மாணவர்கள் வீதம் 150 மாணவர்களையும் மருத்துவ சேர்க்கை செய்யலாமா? என்பது குறித்து முதல்வரின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, பின்னர் தமிழக அரசின் சார்பில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

ஜே.ஐ.சி.ஏ நிறுவனத்துடன் மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் ரூ.1,264 கோடி நிதியில் 45 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் 71 மாதங்கள் எந்தெந்த நிலையில் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிக்கு, ஆனால், இப்போது திருத்திய மதிப்பீட்டுத் தொகை வெளியிடப்பட்டு, மத்திய அரசு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, டெண்டருக்கு பிறகு உலகலாவிய நிறுவனங்கள் பங்கேற்று அதற்கு பிறகு பணிகள் தொடங்கப்படும்.

அதிமுக அரசு சார்பில் மத்திய அரசுக்கு சரியான அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் பணிகள் நிறைவடைந்திருக்கும். ஆனால், முதல்வர் தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கடந்த ஒன்றரை மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த ஆட்சியில் கண்டிப்பாக, மத்திய அரசு ஒப்புதலுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்