அரசு நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ரூ.33 கோடி இழப்பீடு பெற்றது தொடர்பாக 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அரசு நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ரூ.33 கோடி இழப்பீடு பெற்ற விவகாரத்தில் இருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான நில எடுப்பின்போது தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது 2000-ம் ஆண்டில் பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை தனியார் நிலம்போல் பட்டா பெற்று ஆசிஷ் மேத்தா என்பவர் ரூ.30 கோடியும், செல்வம் என்பவர் ரூ.3 கோடியும் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஆசிஷ் மேத்தா, செல்வம், அப்போதைய நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் எதிரொலியாக அந்த கிராமத்தில் நில நிர்வாக ஆணையர் அலுவலகம் மூலம் 36 ஏக்கர் இடத்துக்கான பட்டாவும், மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 46 ஏக்கர் இடத்துக்கான பட்டாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1984-ம் ஆண்டுக்கு முன்னரே அரசு இடத்தை பட்டா இடமாக மாற்றப்பட்ட இடத்தை வாங்கி 83 பேர் இழப்பீடு பெற்றதால் அவர்களிடம் இருந்து ரூ.93 கோடி பணத்தை வசூலிக்க மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மீது குற்ற நடவடிக்கை தொடர்பாக ஏதும் முடிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் 1984-ம் ஆண்டுக்கான பதிவேட்டில் எவ்வாறு அரசு இடம் தனியார் இடமாக மாற்றப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த 83 பேர் தவிர்த்து ஆசிஷ் மேத்தா என்பவர் 7.5 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தை 2000-ம் ஆண்டில் தனது பெயரில் பட்டா மாற்றியுள்ளார்.

இதில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு 2.5 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டதால் அதற்கு ரூ.30 கோடி வாங்கியுள்ளார். மேலும் 28 சென்ட் இடத்தை செல்வம் என்பவருக்கு விற்றுள்ளார். அவர் அந்த இடத்துக்கு ரூ.3 கோடி இழப்பீடு பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் பட்டா மாற்றல் விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கருதி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போலி பட்டா தயாரித்து இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் போலி பட்டா தயாரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரசு ஆவணங்களில் திருத்தம் செய்து அதிகாரிகள் சிலர் இவர்களுக்கு போலி பட்டா வழங்க உதவியுள்ளனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்