ஜவ்வாதுமலையில் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், காணி நிலம் முனிசாமி, குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 நடுகற்களை ஆய்வுக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து, 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது:

"திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எங்கள் ஆய்வுக்குழு வாயிலாக பல்வேறு வரலாற்று தடயங்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பா, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் ஏராளமான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், கல்திட்டைகள், நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஜவ்வாதுமலையில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தியபோது, புதூர் நாட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரும்பல்பட்டிக்கு செல்லும் வழியில் ஸ்ரீ கங்கை நாச்சியம்மன் என்ற கோயில் எதிரேயுள்ள மரத்தடியில் கல்வெட்டு ஒன்று கண்டெடுத்தோம்.

ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

இக்கல்வெட்டானது, புதூர் கிராமத்துக்கு தானமாக நிலம் கொடுத்த செய்தியை எடுத்துக் கூறுகிறது. இக்கல்வெட்டில், 3 தலைமுறைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைமுறையினர் புதூர் நாட்டையோ அல்லது புதூர் நாட்டுக்கோ நிலத்தை தானமாக வழங்கியுள்ள செய்தி இதில் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டானது, கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தானக் கல்வெட்டாகும்.

2-வது கல்வெட்டு, புதூர்நாட்டில் உள்ள சந்தைக்கு அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில் படுத்த நிலையில் கண்டெடுத்தோம். இந்த கல்வெட்டிலும் தானமாக வழங்கிய செய்தி முன்நிறுத்தப்பட்டுள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெங்கடபதி நாயக்கர் காலத்தில் நிலத்தை தானமாகவும் வரி (இறை) இல்லாமல் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. எந்த கோயில் என்ற குறிப்பு அதில் இடம்பெறவில்லை.

இக்கோயிலுக்கு உரிய நிலத்தை யாராவது தவறான முறையில் பயன்படுத்தினால், பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாவார்கள் என, இக்கல்வெட்டு கூறுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கற்கோடாரிகள் முதல் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலம் வரையிலான பல வரலாற்று தடயங்களை ஜவ்வாதுமலை தன்னகத்தே கொண்டுள்ளது. இது போன்ற பெருமைக்குரிய வரலாற்று தடயங்களை மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொல்லியல் துறை பாதுகாக்க முன்வர வேண்டும்".

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

51 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்