நீட் தேர்வுக்கு அதிமுகதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு அதிமுகதான் காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை:

''மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் நீட் பயிற்சியைத் தொடர கல்வித்துறை உத்தரவிட்டதன் காரணமாக, மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினால், நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வுப் பயிற்சிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு என்பதற்கான அறிவிக்கை (MCI-31(1)/2010-Med./49068) இந்திய மருத்துவக் கழகத்தால் 21-12-2010 அன்று வெளியிடப்பட்டு, அது 27-12-2010 ஆம் நாளிட்ட மத்திய அரசிதழில் வெளியாகியுள்ளது.

இந்தத் தருணத்தில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது அதிமுக என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

2006 முதல் 2011 வரை திமுகதான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, நீட் தேர்வு என்பது திமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பதற்கு இதைவிட ஓர் ஆதாரம் தேவையில்லை. அடுத்தபடியாக, 2011 ஆம் ஆண்டு திமுக தலைவர்தான் சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றார் என்று தனது பேட்டியில் அமைச்சர் குறிப்பிட்டார்.

அப்போது, மாநிலத்தில் திமுக ஆட்சி, மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சி. திமுக தலைவரின் ஆலோசனையை அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று 13-3-2010 அன்று நடைபெற்ற தலைமைச் செயலகத் திறப்பு விழாவில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கே குறிப்பிட்டிருந்த நிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய மருத்துவக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையைத் திரும்பப் பெறாமல், எதற்காக திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது என்பதுதான் கேள்வி.

மத்திய அமைச்சரவையில் பிற கட்சிகள் அங்கம் வகித்தால், அந்தக் கட்சிகளும் மத்திய அரசின் அங்கமாகத்தான் கருதப்படும். இவ்வாறு மத்திய அரசின் அங்கமாக இருந்து சட்டம் போட்டுவிட்டு, நீதிமன்றத்தை நாடியது என்பது முறைதானா என்பதை அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையினை மத்திய அரசு உடனே வெளியிட்ட உடனேயே அதனைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், மத்திய அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து, அதன்மூலம் அந்த அறிவிக்கைக்கும் மறைமுகமாக ஆதரவு அளித்துவிட்டு, இப்போது அதிமுகதான் காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வுக்கு முழுக் காரணம், மூலகாரணம் திமுகதான் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே, ஆதரவு வாபஸ் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி இருந்தால், இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டு இருக்கும், நீட் தேர்வு என்ற பிரச்சினையே இருந்திருக்காது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், கரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளே ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வு நடத்துவதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்று மாணவ, மாணவிகள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற அறிவிப்பு மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக நான் அறிக்கை வெளியிட்டதையடுத்து, இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உண்டு என்று அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்துவிட்டு, தற்போது இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உண்டு என்று அறிவித்து இருப்பது சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகிறது.

நீட் தேர்வுக்குப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார். நீட் தேர்வுக்கு வித்திட்டுவிட்டு, அதற்குப் பயிற்சி அளிப்பதைக் குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

2010-ம் ஆண்டே திமுக அப்போதைய மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருந்தால், நீட் தேர்வும் வந்திருக்காது, பயிற்சியும் இருந்திருக்காது என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு வருகிறது. ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்குக் கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தினார்.

தன் இறுதி மூச்சு வரை நீட் தேர்வினை எதிர்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்ட அதிமுக அரசு, 2017-ம் ஆண்டு அதற்காக தனிச் சட்டத்தை இயற்றி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று கடிதங்கள் வாயிலாகவும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நீட் தேர்வினால் கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்த ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அதிமுக அரசு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி, அதன் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்தியது. இதன் மூலம், 2019-2020 ஆம் கல்வியாண்டில் 400-க்கும் மேல் உயர்ந்தது.

இந்தச் சட்டத்தை இயற்றாமல் இருந்திருந்தால், அரசுப் பள்ளியில் பயிலும் 8 மாணவ, மாணவியர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பர். இதன்மூலம், ஏழை, எளிய மாணவர்களை, கிராமப்புற மாணவர்களைப் பாதுகாத்த அரசு ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்ற அதிமுக அரசு என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது அதுகுறித்து பேசுவது 'தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்