புள்ளிவிவரங்களுடன் குவியும் புகார் பட்டியல் அடுத்த களையெடுப்புக்கு தயாராகும் திமுக

By டி.எல்.சஞ்சீவி குமார்

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகிகள், கட்சித் தலைமைக்கு விளக்கம் அளிப்பதற்கு பதிலாக, புள்ளிவிவரங்களுடன் புகார்ப் பட்டியலை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் தங்களைவிட குறைவான வாக்குகளை கட்சிக்கு பெற்றுத்தந்த நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலின்போது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று கூறி 3 மாவட்டச் செயலாளர்கள் உள்பட 33 நிர்வாகிகளை கடந்த சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்தது திமுக தலைமை. மேலும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக்கு ஆளானவர்கள், விளக்கம் அளிப்பதற்கு பதில் புள்ளிவிவரங்களுடன்கூடிய புகார்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். தங்களைவிட அதிக புகார்களில் சிக்கிய மாவட்ட நிர்வாகிகள், தங்களைவிட குறைவான ஓட்டுகளை திமுகவுக்கு பெற்றுத் தந்தவர்கள் என பலரது பட்டியலை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, கட்சி மேலிட நடவடிக்கைக்கு ஆளான நிர்வாகிகள் சிலர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கட்சி வளர்ச்சிக்காக மாவட்டங்களைப் பிரித்தது உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது சரிதான். ஆனால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, உண்மையான நிலைமையை அறிந்து எடுத்திருக்க வேண்டும். அவர்கள் பெற்றுத் தந்த ஓட்டுகள், புகார்களுக்கான ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை இருக்க வேண்டும். ஆனால், இப்போது நடந்திருப்பது கணக்கீடுகளின் அடிப்படையிலான நடவடிக்கை அல்ல. காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலான நடவடிக்கை.

உதாரணத்துக்கு சேலத்தில் பாரப்பட்டி சுரேஷ் தனது 149, 150, 151 ஆகிய மூன்று பூத்களில் அதிமுகவைவிட 900 ஓட்டுகள் கூடுதலாக வாங்கிக் கொடுத்துள்ளார். வேட்பாளர் உமாராணியின் வார்டில் உள்ள பூத்தில் 83 ஓட்டுக்கள் அதிமுக அதிகம் பெற்றுள்ளது. ஆனால், பாரப்பட்டி சுரேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப உறுப்பினர். அவரை ஸ்டாலின் தரப்புக்கு பிடிக்காது என்பதால் இந்த நடவடிக்கை.

அதேபோல் கல்வராயன் மலை வடக்கு ஒன்றியத்தில் அதிமுகவைவிட600 ஓட்டுகள் குறைவாக பெற்றுத் தந்த ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகிலுள்ள சின்ன சேலம் ஒன்றியத்தில் 5,600 ஓட்டுகள் குறைவாகப் பெற்றுத் தந்த ஒன்றியச் செயலாளர் உதயசூரியன் மீது நடவடிக்கை இல்லை. வால்பாறை ஒன்றியத்தில் அதிமுகவுக்கு இணையாக ஓட்டுகளைப் பெற்றுத் தந்தார் ஒன்றியச் செயலாளர் கோழிக்கடை கணேசன். பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆகாதவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திமுகவை நான்காவது இடத்தில் தள்ளிய கன்னியாகுமரியில் யார் மீதும் நடவடிக்கை இல்லை. அங்கு சுரேஷ்ராஜனின் ஏரியாவில் உள்ள 167-வது எண் பூத்தில் பாஜக 349 ஓட்டும், காங்கிரஸ் 146 ஓட்டும் பெற்ற நிலையில் திமுக 78 ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல் திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விருதுநகர், திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடவடிக்கை இல்லை. ஆனால், இரண்டாம் இடத்தை தக்கவைத்த தஞ்சாவூரில் பழனிமாணிக்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வேட்பாளர் மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பகிரங்கமாக புகார் கடிதம் அனுப்பினார். நெல்லையில் கருப்பசாமி பாண்டியன் மீது கூட்டணிக் கட்சித் தலைவரான கிருஷ்ணசாமியே திமுக தலைமையிடம் புகார் கூறினார். அவ்வளவு ஏன்? எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் பொருளாளர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் திமுக சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கியுள்ளது. அதற்கு யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள்?

இதுபோன்ற புள்ளிவிவரங் களை எல்லாம் சேகரித்து கட்சித் தலைமைக்கு புகார் பட்டியல்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இன்னும் சிலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அந்த நிர்வாகிகள் கூறினர். இதனால், திமுகவில் விரைவில் அடுத்த களையெடுப்பு நடவடிக்கை இருக்கும் என்கின் றனர் அந்தக் கட்சியினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்