நெல்லையில் கரோனா பாதிப்பு 10%ஆக குறைந்தது; 3-வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் நிறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே காந்திமதி அம்மன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் யோகா- தியான பயிற்சி கூடத்தை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக முதல்வர் வழங்கிய பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின்மூலம் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் 30 சதவிகிதமாக இருந்த கரோனா தொற்றின் அளவு இப்போது 10 சதவிகிதத்துக்கும்கீழ் குறைந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பால் கரோனா 2-வது அலை குறைந்திருக்கிறது. 3-ம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 438 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடங்குளம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 720 கியுபிக் மீட்டர் அளவில் 103 ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட ஆலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதுபோல் மானூர்வட்டம் சேதுராயன்புதூரில் நாளொன்றுக்கு 2400 கியுபிக் மீட்டர் அளவில் 350 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏர் சப்ளையர்ஸ் நிறுவனத்தின்மூலம் உற்பத்தி செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள கீதா என்டர்பிரைசஸ் மூலம் நாளொன்றுக்கு 1680 கியுபிக் மீட்டர் அளவுள்ள 240 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 3 ஆலைகள் மூலம் மொத்தம் 4800 கியுபிக் மீட்டர் அளவில் 693 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.

இந்த 3 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின்மூலம் தேவையான பராமரிப்பு மற்றும் உதிரி உபகரணங்கள் வெளிமாநிலங்களில் இருந்து துரிதமாக வரவழைக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 ஆலைகளிலும் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்.
கரோனா தொற்றின் 3-ம் அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் பிரத்யேகமான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 415 படுக்கைகள் மற்றும் ஜீரோ டிலே வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டபத்தில் 100 படுக்கைகள், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 210 படுக்கைகள், அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகள் என்று மொத்தம் 825 படுக்கைகள் மாநகர பகுதிகளில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதியில் தருவை எப்எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, பத்தமடை சிவானந்தா மருத்துவமனை, முக்கூடல் பீடித்தொழிலாளர்கள் மருத்துவமனை, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர் யூனிவர்சல் பொறியியல் கல்லூரி, திசையன்விளை புனித அந்தோனியார் கல்வியியல் கல்லூரி என்று 6 இடங்களில் கரோனா சிகிச்சைக்காக 980 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் 2711 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என 13,19,234 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 1,54,500 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான தடுப்பூசிகளை வழங்காததால் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. போதுமான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு ஒதுக்க மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஒருவார காலத்தில் பதில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தனர். ஆனால் இன்னமும் பதில் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து மானூர் வட்டம் சேதுராயன்புதூரில் ஏர் சப்ளைஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு பணி, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கீதா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல்வகாப், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்