கரோனா தடுப்பூசி உற்பத்தி; இரு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால் மக்கள் மடிகிறார்கள்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால், மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 01) வெளியிட்ட அறிக்கை:

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பாஜக ஆட்சி சாதனைகளைச் செய்ததாக நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ.4,880 கோடி செலவு செய்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரங்களால் தோல்விகளை மூடி மறைக்க முடியாது. கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிற சாதனைகளை ஆய்வு செய்தால், இமாலய தோல்விகளையே பாஜக அரசு நிகழ்த்தியதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட முடியும்.

2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவோம், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நிறைவேற்றுவோம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.85 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என, வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றினாரா? வாக்குறுதியின்படி 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலை வழங்க வேண்டிய மோடி ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

2020ஆம் ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துள்ளனர். 2021, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 74 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கடந்த மே 26 அன்று வெளியிட்ட அறிக்கையில், 'வேலையில்லாத் திண்டாட்டம் 11.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நகரத்தில் 13.52 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10.12 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2020 - 21இல் மட்டும் மாத ஊதியம் பெறுவோர் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பு இழப்பினால் வருமான இழப்பு ஏற்படும். கடந்த 13 மாதங்களில் இந்தியாவின் மக்கள்தொகையில் 90 சதவீதக் குடும்பங்களின் வருவாய் குறைந்திருக்கிறது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மே 2021 நிலவரப்படி, குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமான ரூ.375 பெற முடியாமல் 23 கோடி மக்கள் கூடுதலாக வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2005 முதல் 2015 வரை 27 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர். அதில், பெரும்பாலானவர்கள் மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், இதுவரை காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டிய நிலை நடப்பாண்டில் இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

2020-21 நிதியாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதேபோல, நிதி பற்றாக்குறை 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை 18 லட்சமாக உயர்ந்து, மத்திய அரசின் நிதி நிலைமையைக் கடுமையாக பாதித்திருக்கிறது .

கடந்த ஆண்டு மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 லட்சம் கோடியும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வேலையிழப்பு, வருவாய் இழப்பு, சேமிப்பு இழப்பு, முதலீட்டில் பாதிப்பு, மருத்துவ வசதிகளில் பாதிப்பு என, அனைத்து வகையிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, உலக நாடுகளின் வரிசையில் மனிதவளக் குறியீட்டில், 189 நாடுகளில் 131-வது இடத்திலும், வறுமையில் 107 நாடுகளின் வரிசையில் 94-வது இடத்திலும், மருத்துவ வசதிகளில் 153 நாடுகளில் 144-வது இடத்திலும், பத்திரிகை சுதந்திரத்தில் 180 நாடுகளில் 142-வது இடத்திலும் இந்தியா இருப்பது, நமது அவலநிலையை உலக அரங்கில் அம்பலப்படுத்துகிறது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் மோடி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வரலாறு காணாத வகையில், மும்பை மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100, சென்னையில் ரூ.95.76 ஆகவும், டீசல் ரூ.89.90 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பெட்ரோல் விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரி 60 சதவீதமாகவும், டீசலில் 54 சதவீதமாகவும் விதிக்கப்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை மே 2014இல் ரூ.47 ஆக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71. ஆனால், மே 16, 2021இல் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.34 ஆக இருக்கும்போது, ஒரு லிட்டர் விலை 93 ஆக உயர்ந்திருக்கிறது.

மே 2014இல் மத்திய அரசின் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ.10.39. அது தற்போது பாஜக ஆட்சியில் ரூ.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், கலால் வரியை உயர்த்தி, கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 20 லட்சம் கோடி வரை வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டுள்ளது.

இதன் மூலம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது சுமையை ஏற்றிய மக்கள் விரோத அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால், போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்து மக்களுக்குத் தேவைப்படுகிற அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்கிறது. பணவீக்கம் 11.3 சதவீதமாக உயர்ந்து, மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி குற்றம் சாட்டியதைப் போல, கார்ப்பரேட்டுகளின் நலனைப் பாதுகாப்பதில்தான் பிரதமர் மோடி அக்கறை காட்டி வருகிறார். 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

பிரதமர் மோடியின் நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து 3 மடங்காகவும், அதானியின் சொத்து 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் 2020இல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ. 2,773 கோடி.

இதில், பாஜகவுக்கு மட்டும் வழங்கப்பட்டது ரூ.1,660 கோடி. மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்காக நடக்கிறதா? அம்பானி, அதானியின் சொத்துக் குவிப்புக்காக நடக்கிறதா? என்ற கேள்விக்கு பாஜகவினர் பதில் கூற வேண்டும்.

எனவே, கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவை ஆளுகிற பிரதமர் மோடி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்ததோடு, கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.

உலக வல்லரசுகளின் ஒன்றாக இருக்கிற இந்தியாவால் அணுசக்தித் துறையின் மூலம் அற்புதங்கள் செய்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால், மக்களின் உயிரைப் பாதுகாக்க ஒரு தடுப்பூசியைக் கூட இந்திய அரசால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தி செய்து, கொள்ளை நோயிலிருந்து மக்களின் உயிரை அன்றைய மத்திய அரசுகள் பாதுகாத்தன. ஆனால், 136 கோடி மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பேராயுதமாக விளங்குகிற தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால், மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய பிரதமர் மோடி, அதற்கு மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது. எனவே, 7 ஆண்டு மோடி ஆட்சியை வேதனையிலும் வேதனையான ஆட்சியாகத்தான் நாட்டு மக்கள் கருதுகிறார்கள்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்