கரோனா காலத்தில் கிராமப் பகுதிகளில் தெருநாய்களைத் தேடிச் சென்று உணவளிக்கும் புதுச்சேரி இளைஞர்கள்

By செ. ஞானபிரகாஷ்

கரோனா காலத்தில் புதுச்சேரி கிராமப் பகுதிகளில் தெருநாய்களைத் தேடிச் சென்று இளைஞர்கள் உணவு வழங்கி வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கி வருகின்றனர்.

கரோனா பரவலால் மக்கள் மட்டுமல்ல வாயில்லா ஜீவன்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. தமிழக அரசும் உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரியிலோ தேர்வான அரசு முழுமையாகப் பொறுப்பு ஏற்கவில்லை. அத்துடன், 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும், கால்நடைத்துறை செயல்பட்டாலும் வாயில்லா ஜீவன்களின் துயர் போக்கும் நடவடிக்கையில் யாரும் களம் இறங்கவில்லை.

மக்களுக்கான நலத்திட்டங்களே கேள்விக்குறியாக உள்ள சூழலில், புதுச்சேரி அரசை எதிர்பார்க்காமல் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் சிலர், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தரும் பணியைச் சத்தமின்றி நிறைவேற்றி வருகின்றனர்.

நகரப் பகுதியில் பலரும் தெருவிலுள்ள வாயில்லா பிராணிகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். அத்துடன், மருத்துவர்கள் குழுவும் அந்நாய்கள் உடல் நலம் குன்றியிருந்தால் சிகிச்சை தரும் தன்னார்வப் பணியிலும் உள்ளன. ஆனால், கிராமப் பகுதியிலுள்ள வாயில்லா ஜீவன்களின் நிலை இக்காலத்தில் பரிதாபகரமாகத்தான் உள்ளது.

புதுச்சேரி கிராமப் பகுதியான கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரேம். பொறியியல் பட்டதாரியான இவர், அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து தன்னார்வலர் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வழங்கி வந்தார்.

தற்பொழுது, கரோனா காலமென்பதால் தெருநாய்கள் உணவின்றி அவதிப்படுவதைக் கண்ட இளைஞர்கள், கிராமத்தைச் சேர்ந்த வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து, பிரேம் கூறுகையில், "ஆதரவற்றோருக்கு உணவு தந்தோம். அப்போதுதான் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கிடைக்காமல் இருப்பது தெரிந்தது. அதனால், எங்கள் கிராமம் கரிக்கலாம்பாக்கத்தில் தெருநாய்களுக்கு உணவு தரத் தொடங்கினோம்.

அதைத் தொடர்ந்து, அருகேயுள்ள வில்லியனூர், கோர்காடு என, அருகேயுள்ள பத்து கிராமங்களில் தினமும் ஒருவேளை உணவை வீட்டில் தயாரித்து இளைஞர்கள் மூலம் தருகிறோம். வாரத்தில் மூன்று நாள் கறிசோறும், தினமும் பிஸ்கட், பிரட் ஆகியவையும் தருகிறோம்.

மக்களே தற்போது கரோனா ஊரடங்கால் தவிக்கின்றனர். அதனால் எங்கள் சொந்தச் செலவில்தான் உணவு தருகிறோம். எங்கள் வருகைக்காக நாய்கள் காத்திருந்து உணவு சாப்பிடுவதைப் பார்த்தாலே எவ்வளவு சுமையும் பறந்துபோகும்.

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே பறவைகளுக்குத் தண்ணீரும், உணவும், அருகிலுள்ள வாயில்லா பிராணிகளுக்குத் தாங்கள் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி தரலாமே" என்று கோரிக்கை விடுத்துள்ளார் பிரேம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்