செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும், இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்து, அங்கு உற்பத்தியை தொடங்குவது பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளார். இது ஓர் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என்றாலும் கூட, அந்த வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையாலும் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் உலகத்தரம் கொண்டதாகும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவையான தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வளாகத்தில் தயாரித்து விட முடியும். அதனால் தான் செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது குறித்து மத்திய, மாநில மருத்துவ அமைச்சர்களுக்கு கடிதமும் எழுதினேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி வளாகத்தை ஆய்வு செய்து அவ்வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், இது காலம் கடந்த கோரிக்கை ஆகும். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் அமைக்கும் திட்டம் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அந்த ஆண்டிலேயே அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

2010-ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், 95% பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வரை தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவில்ல்லை. இது தொடர்பாக 2019-ஆம் ஆண்டிலும், இம்மாதத்தின் தொடக்கத்திலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், மத்திய அரசு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்காமல், 15 ஆண்டுகள் குத்தகைக்கு தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானித்து, அதற்கான டெண்டர்களை பெறும் நடவடிக்கைகளையும் கடந்த 21-ஆம் தேதி நிறைவு செய்து விட்டது.

அதன் மூலம் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை நேரடியாக நடத்தும் திட்டம் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் ஏதோ ஒரு நிறுவனம் தான் அந்த வளாகத்தை நடத்தும். மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசே தடுப்பூசிகளை தயாரித்து சொந்தப் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளவற்றை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

மாறாக, செங்கல்பட்டு வளாகத்தில் மத்திய அரசே தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத ஒன்றை கூறுவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது. செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்காக தமிழக அரசும் குரல் கொடுத்தது என்ற பெயர் மட்டுமே கிடைக்கும்.

கரோனா மூன்றாவது அலையிலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், டிசம்பருக்குள் தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும். அதற்கு குறைந்தது 12 கோடி தடுப்பூசிகள் தேவை. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்தாமல், வேறு எந்த வழியிலும் இவ்வளவு தடுப்பூசிகளை தமிழக அரசால் பெற முடியாது. இது தான் எதார்த்தம் ஆகும்.

தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்காக 3.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய டெண்டர்களை தமிழக அரசு கோரியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தடுப்பூசி வழங்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக மராட்டியம், கேரளம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கோரிய உலகளாவிய டெண்டர்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்துப் பார்க்கும் போது தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உலகச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய முடியாது. அத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக் கூறுகளை தமிழக அரசு இப்போதே ஆராய வேண்டும்.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் மத்திய அரசு உற்பத்தியைத் தொடங்கினாலும், தனியார் மருந்து நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப் படாது. அதேநேரத்தில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும்.

இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழகத்திற்கு தடுப்பூசி தன்னிறைவை வழங்கும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்