பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதைக் கண்காணிக்க 24 மணி நேரச் சேவை மையம்: தொலைபேசி எண்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

பொதுமக்களுக்குப் பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதைக் கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் இன்று (மே 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா தாக்கத்தின் காரணமாக 24.05.2021 முதல் 31.05.2021 வரை தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு உத்தரவு தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஊரடங்கின்போது பொதுமக்களுக்குத் தேவையான பால் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க, கீழ்க்கண்ட நடவடிக்கைள் ஆவின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் சுமார் 1,000 பால் டெப்போக்கள் மூலம் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும், ஆவின் நிர்வாகத்தால் 38 பாலகங்கள் மூலம் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, நகரின் பிரதான பகுதிகளில் 156 ஆவின் பாலகங்கள் முகவரால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கூறிய அனைத்துப் பாலகங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

* மேலும் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் பால் விநியோகம் செய்வதற்காக 20 நடமாடும் பால் விற்பனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

* நகரின் முக்கியப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தற்காலிக பால் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் 48 பால் கூட்டுறவு நுகர்வோர் சங்கங்கள் தற்காலிக பால் விற்பனை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

* இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் தற்காலிக விற்பனை மையம் அமைத்துப் பொதுமக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட ஆவின் பாலகங்களில் போதிய பால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

* நீண்ட நாட்கள் கெடாத டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஆவின் பாலகங்களிலும் போதிய இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்குப் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக சொமேட்டொ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் நுகர்வோர்கள் மூலம் பெறப்பட்டு, ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற சென்னை மாநகரிலுள்ள அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* பொதுமக்களுக்குப் பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதைக் கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பகுதி வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-23464575, 23464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300.

இன்று (24.05.2021) முதல் தளர்வில்லா ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, சென்னை மாநகரின் அனைத்து இடங்களிலும் பால் விநியோகம் தங்கு தடையின்றிக் கிடைக்க பால் வளத்துறை அமைச்சர் நாசர் தற்காலிக விற்பனை நிலையங்களை தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் நங்கநல்லூர் பகுதிகளில் விநியோகம் செய்ய அனுப்பிவைத்தார்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தற்காலிக விற்பனை மையத்தையும் மற்றும் கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியிலுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் பொதுமக்களிடம் ஆவின் பால் சரியான விலையில் விற்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை முகப்பேர் டிஏவி பள்ளி அருகிலுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை அமைச்சர் ஆய்வு செய்தர்".

இவ்வாறு ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்