முதல்வரான பிறகு முதல் வெளியூர்ப் பயணம்; சேலத்தில் கோவிட் சிறப்பு சிகிச்சை மையம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு முதல்வரால் கரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன. கடந்த 07.05.2021 முதல் இன்று வரை 71,417 சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான 8,768 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, 7,432 நபர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட சேலம் மாவட்டத்தில் தீவிரமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என, மொத்தம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,583 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 2,770 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்திடவும், ஊரடங்கினைக் கண்காணித்திடவும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தனியாக உள்ளார்களா என்பதைக் கண்காணிக்கவும், கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலனைக் கண்காணித்திடவும், சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24*7 கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக 26 கோவிட் பராமரிப்பு மையங்களும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் 9 கோவிட் பராமரிப்பு மையங்களும் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 3 கோவிட் பராமரிப்பு மையங்கள் ஆக மொத்தம் 38 கோவிட் பராமரிப்பு மையங்கள் (கோவிட் கேர் சென்டர்) தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், சித்த மருத்துவத் துறையின் சார்பில், சேலம் - 8 அரசு மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் 100 படுக்கை சித்த மருத்துவ கோவிட் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் நோயாளிகளின் சிகிச்சைக்கு இன்று தொடங்கப்படுகிறது.

மேலும், முதன்முறையாக தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையம், உயிர் காக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்து மேலும் இம்மையத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமெனவும், 10 நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திடவும் உத்தரவிட்டுள்ளார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அவர் முதல்வரான பிறகு மேற்கொண்ட முதல் வெளியூர்ப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்