முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற முடியாமல் கரோனா நோயாளிகள் அவதி

By க.சக்திவேல்

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற இடம் கிடைக்காமல், கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதைத் தவிர்க்க குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பொது மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நேரடியாக இந்த மருத்துவமனைகளை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த இலவச மருத்துவ சிகிச்சை தொடா்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.cmchistn.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய நிலையிலேயே இருப்பதால், தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலைக்கு ஏழை நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு இலவச சிகிச்சை பெறலாம் என அரசு அறிவித்திருந்தாலும், காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது.

இது தொடர்பாக, கரோனா நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறும்போது, "காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்க வேண்டுமென்றாலும் முன்பணம் செலுத்த வேண்டும் என, சில தனியார் மருத்துவமனைகளில் தெரிவிக்கின்றனர்.

கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் எந்த பதிலும் இல்லை. தற்போது இளம்வயதினர் உட்பட பலருக்கு சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்படுகின்றன.

ஆனால், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எந்த மருத்துவமனையில் இடம் உள்ளது என்பதைத் தேடி அலைய வேண்டியுள்ளது. எங்கு தொடர்புகொண்டாலும் படுக்கை இல்லை என்றே பதில் வருகிறது. எனவே, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா நோயாளிகள் பயன்பெற ஏதுவாக, மொத்தமுள்ள படுக்கைகளில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என, அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

அதில், எத்தனை படுக்கைகள் நிரம்பியுள்ளன, எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்