சேலத்தில் தனியார் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

By வி.சீனிவாசன்

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் ஆக்சிஜன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (மே 17) நடைபெற்றது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் ராமன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்குப் பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் நேற்று 822 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், முதல் பிரச்சினையாக இருப்பது ஆக்சிஜன் தேவையாகும்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். அரசு வழங்கும் ஆக்சிஜனை தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைத்து, பிரித்து, ஒதுக்கீடு செய்துகொள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் கிளை நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளுக்கு 20 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கேட்டுள்ளனர். அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி, தேவை குறித்துக் கேட்டுள்ளோம். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் பெற்றுத்தர முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 20 செறிவூட்டிகள் வந்து சேர்ந்துள்ளன. சேலம் இரும்பாலை சிகிச்சை மையத்தில் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கும்போது கரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது.

கரூரில் இரண்டு பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலத்திற்கு ஒரு பேருந்து பயன்படுத்தப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 எம்எல்ஏக்கள் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் உள்ள எம்எல்ஏக்களின் கருத்துகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் கரோனா தொற்று மரணத்துக்கு உரிய நிதியுதவி தருவது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கூட்டத்தில் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்