காத்திருக்கும் நோயாளிகளைக் காக்க புது முயற்சி; அரசு மருத்துவமனைகளில் அவசர ஆக்சிஜன் பேருந்து: திருப்பூரில் தனியார் அமைப்பு ஏற்பாடு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பெரும்பான்மையாக நிரம்பிவிட்ட நிலையில் புதிதாக வரும் நோயாளிகளைக் காப்பாற்றும் விதமாக, ’திருப்பூர் ஆக்சிஜன் பேருந்தை’ தனியார் அமைப்பு இன்று ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் 34 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 44 மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்கு வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் பெரும்பான்மையாக நிரம்பிவிட்டன. இந்த நிலையில் புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழலைத் தவிர்க்க, தனியார் அமைப்புகள் இணைந்து ’ஆக்சிஜன் பேருந்து’ என்ற ஒன்றை உருவாக்கிய நிலையில், இன்று ஆக்சிஜன் பேருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது.

தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 6 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களைப் பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தக் கருவியானது சாதாரண சூழ்நிலையில் இருந்து, ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து சுத்திகரித்து நோயாளிக்கு அனுப்பும். இந்தப் பணிகள் முடிந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு இன்று கொண்டுவரப்பட்டது.

மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கும் வரை, நோய்த் தொற்று உடையவர்கள் இந்தப் பேருந்து மூலம் தற்காலிகமாக ஆக்சிஜன் பெற்று, அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதனை மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் பார்வையிட்டனர்.

இது தொடர்பாகத் தனியார் அமைப்பினர் கூறும்போது, ''அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரை, தற்காலிகத் தீர்வாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரே நேரத்தில் 6 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம். நோயாளிகளுக்கு உடனடி ஆக்சிஜன் கிடைக்கும் ஒரு தற்காலிக ஏற்பாடு இது.

சோதனை முயற்சியாக மூன்று நாட்கள் வரை பயன்படுத்திவிட்டு, அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பேருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்படும். இதனைத் தொற்றாளர்கள், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரை அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்