உலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை

By எஸ்.ருக்மணி

டிசம்பர் 1-ம் தேதியன்று பருவநிலை மாற்றத்தின் அத்தனை அம்சங்களும் ஒன்றிணைந்து சென்னையில் வரலாறு காணாத மழையை கொட்ட வைத்துள்ளது. இது ஒரு கெட்ட செய்தி என்றால், இந்த நிலை மேலும் நீடிக்கும், அதாவது மேலும் கனமழை பெய்யவே வாய்ப்பிருப்பது மோசமான செய்தியாகும்.

உலக வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டின் எல் நினோ விளைவு பற்றி தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமிருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் மிகச்சரியாகவே கணித்தது.

எல் நினோ விளைவால் மேற்கு இந்திய கடல் நீர் வெப்பமடைதலும், கிழக்கு இந்திய கடல்நீர் குளிர்வடைவதும் நிகழ்ந்தது. இந்தியப் பெருங்கடல் இந்த ஆண்டு அளவுக்கதிகமாக வெப்பமடைந்ததால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் வெப்ப அளவு அதிகரித்து தெற்கு அந்தமான் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வந்துள்ளன, வருகின்றன என்று ஸ்கைமெட் கணித்துள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி இத்தகைய வலுவான பருவநிலை அமைப்பினால் சுமார் 490மிமீ மழைநீரைச் சுமந்து மேகங்கள் படையெடுத்து சென்னையை வெள்ளக்காடாக்கியுள்ளது, இது எல் நினோ விளைவைக் காட்டிலும் அதிகமானது என்கிறது ஸ்கைமெட்.

ஆனால், எல்நினோ விளைவு இந்த பருவம் முழுதுக்கும் பொருந்தும் என்பதால், சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை ஒரு தனிப்பட்ட நிகழ்வே என்கிறார் இந்திய வானிலை ஆய்வு மைய கூடுதல் தலைமை இயக்குநர் பி.முகோபாத்யாய.

“டிசம்பர் 1-ம் தேதி போன்ற நிகழ்வுகள் பல்வேறு காரணிகளால் ஏற்படுபவை. ஒவ்வொரு இது போன்ற நிகழ்வுகளிலும் சேரும் காரணிகள் வேறுபட்டவை. டிசம்பர் 1-ம் தேதியன்று ஏற்பட்ட பருவ நிலை நிகழ்வு மேலடுக்கு சுழற்சி என்பதால் உருவானதே. இதனால் மேகம் தீவிர நிலையை எட்டியது, இது போன்று நிகழ்வது அரிதே” என்கிறார்.

உலக அளவில் 2015-ம் ஆண்டு அதிவெப்ப ஆண்டாக திகழ்வதை நோக்கி சென்று கொண்டிருப்பதையும், அதன் காரணமாக கடல் வெப்ப அளவு அதிகரிப்பும் கவனிக்கத்தக்க காரணியாக இருந்து வருகிறது.

அமெரிக்க கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 2015-ல் இந்தியப் பெருங்கடலின் வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று நிறுவியுள்ளது.

இதனால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாவதால் தீவிர மழை மேகங்களை நிலப்பகுதிகளுக்குள் பெரிய அளவில் கொண்டு செலுத்துகிறது. “சென்னையின் இத்தகைய தீவிர மழை இந்த விளக்கத்துக்கு பொருந்தக்கூடியதே” என்று அமெரிக்க வானிலை ஆய்வு நிபுணர் எரிக் ஹோல்தாஸ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.

இத்தகைய அதிகன மழை நிகழ்வுகள் இனி அடிக்கடி நிகழவே வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கிறார். 2009-ம் ஆண்டு வெப்ப மண்டல வானிலைக்கான இந்திய ஆய்வுக் கழகத்தின் ஆய்வு ஒன்று அபாயகரமான மழை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கண்டறிந்தது.

2011-ம் ஆண்டு பருவநிலை மாற்ற ஐநா குழுவும் கனமழை, அதிகனமழை நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணித்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்ற விளைவுகள் சரியாக கணிக்கப்பட்டிருந்தாலும், சென்னையை பொறுத்தவரை அதன் தாக்கம் நிர்வாகக் கோளாறுகளால் மேலும் மோசமடைந்தது என்றே கூற வேண்டும். மழை நீர், வெள்ள நீர் செல்ல வழியே இல்லை என்பதும் இப்போது வெளிப்படையாக தெரிந்த ஒன்றாகிவிட்டது.

டிசம்பர் 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் பொதுப்பணித்துறையினரால் திறந்து விடப்பட்டது. இதுவே நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகக் காரணமானது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, இவ்வளவு கன அடி நீர் திறந்து விடப்படுவது அவசியம் காரணமாகவே என்று வலியுறுத்துகின்றனர். ஏரியின் பாதுகாப்பில் நாம் அலட்சியம் காட்ட முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

நகரின் மையப்பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் இருப்பதையும் இதனை தடுக்க மாநில அரசு தயாராக இல்லை என்பதையுமே சென்னை வெள்ளத்துயரம் எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் குடியிருப்புவாசிகளுக்கு வெள்ளம் பற்றிய முன்னெச்சரிக்கை குறித்த நேரத்தில் விடுக்கப்படவில்லை.

வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டது சென்னையின் தென்பகுதி புறநகர் பகுதிகளே. கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதிகளில்தான் ரியல் எஸ்டேட் கொடிகட்டிப் பறந்தது. நீர்த்தேக்கப் பகுதிகளிலும், ஏரியை ஒட்டிய பகுதிகளிலும் திட்டமிடப்படாத வகையில் அனுமதியற்ற குடியிருப்புப் பகுதிகள் தோன்றின.

அனுமதி பெறாத கட்டிடங்களை, குடியிருப்புகளை பஞ்சாயத்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் பெரிய அளவுக்கு குடியிருப்புக் கட்டிடங்கள் முளைத்தன. தண்ணீர் போகும் பாதைகளும் அடைபட்டு விட்ட நிலையில், வெள்ள நீர் வடிய நீண்ட நாட்கள் தேவைப்படுகிறது.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றுப்பகுதிகளில் நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கு உலக வங்கி சென்னைக்கு ரூ.1000 கோடி அளித்துள்ளது. இது தொடர்பாக 39 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் படுகைகளில் இத்தகைய பணிகள் தாமதம் அடைந்துள்ளன, காரணம் இத்திட்டத்துக்கு எந்த ஒரு முகமையும் நிதி அளிக்க முன்வரவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்