வெளிநாடுகளில் படித்து, பயிற்சி மருத்துவர் பணிக்காக காத்திருக்கும் 1,000 மருத்துவர்களை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, பயிற்சி மருத்துவராகப் பணியாற்றக் காத்திருக்கும் 1,000 மருத்துவர்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 3 வாரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் உயர்ந்து இருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன. ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை.

ஒவ்வொரு மருத்துவரும் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு கரோனாமுதல் அலையின்போது மருத்துவர்கள் 2 வாரம் தொடர்ந்து பணியாற்றினால், ஒரு வாரம் தனிமைப்படுத்தி ஓய்வு அளிக்கப்பட்டது. இப்போதுமருத்துவர்கள் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால், மருத்துவர்கள் கடும் பணிச்சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

தொற்று அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற விண்ணப்பித்து காத்திருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பும் மருத்துவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்து வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கூறியதாவது:

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் கரோனாநோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. அதேநேரம், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வந்தவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் எஃப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்ற விண்ணப்பித்துவிட்டு, 17 ஆயிரம் மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும்1,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். மருத்துவ கவுன்சில் விதிமுறைகளால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற ரூ.5 லட்சமும், மற்ற மாவட்டங்களில் பணியாற்ற ரூ.2 முதல் ரூ.3 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு பயிற்சியின்போது எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படுவதில்லை. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிற்சியின் போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. டெல்லியில் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சி கட்டணம் பெற்றுக் கொண்டு,ஊக்கத்தொகை தரவில்லை என்றாலும், நாங்கள் இலவசமாக ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற தயாராக இருக்கிறோம் என விண்ணப்பித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழகத்தில் காத்திருக்கின்றனர்.

கரோனா தொற்று 2-வது அலைதீவிரமடைந்துள்ளதாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளைத் தளர்த்தி இந்த மருத்துவர்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே, மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் கரோனா சிகிச்சைக்கு சென்றுவிட்டனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த தயக்கம் இருந்தால், மினி கிளினிக்குகளில் ஓராண்டுக்கு பணியாற்ற நியமிக்க வேண்டும். இதன்மூலம் ஓரளவு மருத்துவர்கள் பற்றாக்குறை தீரும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால்,இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு பயிற்சி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தமிழக சுகாதாரத் துறையும், மருத்துவ கவுன்சிலும் தேவையான நடவடிக்கைகளை உடனேஎடுக்க வேண்டும். இவ்வாறு முகமதுகனி தெரிவித்தார்.

மதிப்பெண்ணை குறைக்கலாம்

மேலும், தகுதித் தேர்வு குறித்து முகமது கனி கூறியதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா திரும்பும்மருத்துவர்களுக்கு எஃப்எம்ஜிஇ தகுதித் தேர்வு ஆண்டுதோறும் ஜூன்,டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலின்படி தேசிய தேர்வுகள் வாரியம் இத்தேர்வை நடத்துகிறது. இதில் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அப்போதுதான் அவர் பயிற்சி மருத்துவராக ஓராண்டுபணியாற்றிவிட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராகப் பணியாற்ற முடியும்.

5 ஆண்டுகள் படித்ததை 5 மாதத்தில் திரும்பவும் படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளதால், பெரும்பாலானவர்கள் 50 சதவீதமதிப்பெண்ணுக்கு சற்று குறைவாகபெற்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் தேர்வு நடைபெறவுள்ளது. நேரடி வகுப்புகளில் தேர்வுக்கான பயிற்சியை எங்கள் லிம்ரா பயிற்சி மையம் அளித்துக் கொண்டிருந்தது.

கரோனா தொற்று 2-ம் அலையால், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று ஆன்லைன் வழியேவகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்தும், நூலகங்களுக்கு சென்றும் படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி, அவர்களால் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியவில்லை. எனவே, ஜூன் மாதத் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெறும் மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயித்தால் பல்லாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் கிடைப்பார்கள். அவர்களை கரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

31 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்