தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1,000 கோடி: சென்னையில் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழை, வெள்ளத்தால் இதுவரை 269 பேர் பலியாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று மாலை 3.30 மணிக்கு அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்துக்கு வருகை தந்தார். அவரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ள பாதிப்புகளை விவரித்தார்.

பின்னர் ராஜாஜி சாலையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு விமானத் தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கு முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமார் 30 நிமிடங்கள் மழை, வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ‘‘தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் மிக கடுமையாக உள்ளதை நேரில் பார்வையிட்டேன். தமிழகத்துக்கு ஏற்கெனவே ரூ. 940 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக மேலும் ரூ. 1,000 கோடி வழங்கப்படும். மீட்பு, நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக மக்களின் துயரங்களில் மத்திய அரசு பங்கேற்கிறது’’ என்றார்.

பின்னர் மாலை 4.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் அரக்கோணம் புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு தோளோடு தோள்நின்று உதவும்’’ என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆய்வு

இன்று காலை 11.10 மணிக்கு ராஜாஜி சாலை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு விமானத் தளத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருகை தந்தார். அங்கிருந்து காலை 11. 15 மணி முதல் 11.55 வரை 40 நிமிடங்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், அசோக் நகர், வியாசர்பாடி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், ரெட்டை ஏரி, புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் 12 மணிக்கு தலைமைச் செயலகம் திரும்பிய முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், முக்கியத் துறைகளின் செயலாளர்களுடன் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆசோலனை நடத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை நிலவரப்படி கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 460 முகாம்களில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 636 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் 41 லட்சத்து 96 ஆயிரத்து 436 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 470 பம்புசெட்டுகள் 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 82 ஜேசிபி, பொக்லைன் மூலம் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்தை சரி செய்ய சுரங்கப் பாதைகளில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு மின் விநியோகம் படிப்படியாக சீர் செய்யப்படும். நிவாரப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

24 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் 9 ராணுவ குழுக்கள், 200 கடற்படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவல் படையின் 3 குழுக்கள், தமிழக காவல் துறையின் 60 பயிற்சி பெற்ற வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நடக்காமல் தடுக்க காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு ஆவின் பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுங்க கட்டணம் வசூலிக்க டிசம்பர் 11 வரை தடை

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் 11-ம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், மீட்பு, நிவாரணப் பணிகளுக்கான வாகனங்களும் எவ்வித தடங்கலும் இல்லாமல் செல்ல சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான பள்ளிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல பள்ளிகள் வெள்ள நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி வரை சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்