பணம், தங்கம், பொருட்களை பறிமுதல் செய்வது, வாக்காளருக்கு விநியோகிப்பதை தடுக்க உதவாது- தார்மிகக் கொள்கைகளை அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்தேறியுள்ளது. வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், தேர்தல் பணிக்கு ஊழியர்களை நியமித்தல், பயிற்சி அளித்தல், வாக்குச்சாவடிகள் நிறுவுதல், குறிப்பாக கரோனா பரவல்காரணமாக கூடுதலான வாக்குச்சாவடிகளை அமைத்தல் ஆகிய பணிகள் அடுத்தடுத்து நடைபெற்றன.

மேலும், தேர்தல் ஆணையம் நியமித்த பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அடங்கிய பெரும் படையின் உதவியுடன் தேர்தல் செலவினங்களைக் கண்காணித்து பரிசீலித்தல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில், மலைக்கச் செய்யும் அளவில் தேர்தல் இயந்திரத்தின் பெருமுயற்சி அடங்கியுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் கருத்தரங்கு ஒன்றில் கூறியதுபோல, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு, மக்களைக் கவரும் இலவசங்களையும், சலுகைகளையும் அள்ளித் தெளித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.

வருமான வரி, வருவாய் புலனாய்வு அலுவலர்கள் நடத்திய சோதனைகளில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வுசெய்வதுதான் பொருத்தமாக இருக்கும். வாக்காளர்களுக்கு பணம்போல,தங்கக்கட்டிகள் விநியோகம் செய்யவாய்ப்பில்லை. இவ்வாறு தங்கக்கட்டிகள், பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க உதவுவதாக அமையாது. இந்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் ஆற்றல் தவறாக திசை திரும்பியதாகத் தெரிகிறது.

வாக்குப்பதிவு சதவீதம்

மாநிலத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்கு 73.78 சதவீதம். சென்னை மாவட்டத்தில் மிகக் குறைவாக 59.06 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். நகர்ப்புறங்களில் நிலவும் அக்கறையின்மை கவலைக்குரியது.

2017 டிசம்பர் நிலவரப்படி, 10 லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 21 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நாடுகள் பலவற்றில் முறையாக அது செயல்படுத்தப்படவில்லை. கட்டாய வாக்களிப்பு என்பது கோட்பாட்டு அளவில் சிறந்ததாகத் தோன்றினாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

சிலர் தேர்தல் நாளன்று வெளியூர் சென்று இருக்கலாம். வேறு சிலர் உடல்நலக் குறைவால் வாக்களிக்க இயலாமல் போகலாம். முகவரி மாறிய, வாக்காளர் பட்டியலில் இல்லாத மற்றும் இறந்த வாக்காளர்கள் இருப்பது தேர்தல் நடைமுறையில் வாடிக்கையான ஒன்று. மேலும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம். இத்தகைய காரணங்களால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

வாக்காளர்களை, குறிப்பாக முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்களை, ஊக்குவிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு (Information, Education and Communication - IEC) என்ற ஒருபிரச்சாரத்தை பெரிய அளவில் நடத்துகிறது. இது இப்போது முறைப்படுத்தப்பட்ட வாக்காளர்களின் கல்வி மற்றும்தேர்தல் பங்கேற்பு (SVEEP - Systematic Voters’ Education and ElectoralParticipation) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இது, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும்வாக்காளர் செயலறிவை ஊக்குவிப்பதற்கான ஆணையத்தின் முதன்மைத் திட்டம் என கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டுமுதல், வாக்காளர்களை ஆயத்தம் செய்யவும், தேர்தல் செயல்முறை தொடர்பான அடிப்படை அறிவை அவர்களுக்கு அளிப்பதற்கும் இந்திய தேர்தல் ஆணையம் முயன்று வந்துள்ளது.

SVEEP-ன் முதன்மைக் குறிக்கோள்,தகுதிவாய்ந்த அனைத்து குடிமக்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதன் மூலமும், தேர்தல்களின்போது அறிவார்ந்த முடிவை எடுக்கச் செய்வதன் மூலமும் உண்மையான பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதுதான்.

அக்‌ஷய் ரவுத் காலத்தில் இருந்தே இது உருவாகி, அதன் செயல்பாடு உந்துதலைப் பெற்றது. இருப்பினும், அதற்காக செலவிடப்பட்ட நிதிக்கு ஏற்ப அதன் தாக்கம், பயன்பாடு அமைந்துள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள் கல்வியறிவு பெற்றவர்கள், அரசியல் உணர்வு உள்ளவர்கள். எனவே, பிரதிநிதித்துவப்படுத்தப்படாத இளைஞர்களுக்கு அரசியல் செயல்பாட்டில் பங்கு பெறும் வாய்ப்பை வழங்குவதற்காக, வாக்களிக்கும் வயது 21-ல்இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘‘வாக்களிப்பது ஒரு புனிதமான உரிமை, இது நாம் தேசத்துக்கு நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமை. எனவே அனைவரும் முன்வந்து தமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

SVEEP-ன் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்து, திட்டத்தை ஒழுங்குபடுத்தி அதன்மூலம் செலவுகளை குறைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

அறநெறி, ஒழுக்கவியல்

பண்டைய இந்தியாவில், ஒழுக்கவியலின் ஒரு கிளையாக அரசியல் கருதப்பட்டது. இதை மகாத்மா காந்தியும் வலியுறுத்தினார். தேர்தல்கள், ஜனநாயகசெயல்முறையின் பிரிக்க முடியாத பகுதி. ஆயினும், பெரும்பாலும் தேர்தல்கள் மனிதனின் தீய முகத்தை வெளிப்படுத்துகின்றன. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒருமுறை கூறும்போது, “ஒரு தேர்தலில் வெற்றி, தோல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்றார்.

எனவே, தார்மிகக் கொள்கைகளை அரசியல்வாதிகளும், சாதாரண குடிமக்களும் கடைபிடிக்க வேண்டும். இந்தக் கூற்றும் லட்சியமும்தான் அனைவர் மனதிலும், இதயத்திலும் பதியச் செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறை, எழுத்தளவிலும், மனப்பூர்வமாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

51 secs ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்