ஆம்பூர் அருகே 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்:  ஒற்றை யானையால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்

By ந. சரவணன்

ஆம்பூர் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரியும் ஒற்றை யானையை ‘கும்கி யானை’யை கொண்டோ, அல்லது ‘மயக்க ஊசி’ செலுத்தியோ பிடிக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் இன்று நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆம்பூர் பைரப்பள்ளியை யொட்டியுள்ள பெரியதுருகம் காப்புக்காடு அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்கு, ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இங்குள்ள வனவிலங்குகள் ‘மாடு ஊட்டல்’ என்ற இடத்தில் உள்ள நீர்நிலையில் தண்ணீரை பருகி வந்தன. தற்போது கோடை காலம் என்பதால் இந்த நீர்நிலை வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி பொன்னப்பல்லி, பாலூர் வழியாக ஆம்பூர் பகுதியை யொட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைகின்றன.

கடந்த 2-ம் தேதி தண்ணீர் மற்றும் உணவு தேடி ஒற்றை யானை ஒன்று பொன்னப்பல்லி கிராமத்துக்குள் நுழைந்தது. அன்றைய தேதியில் அங்கிருந்த விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்ட நெற்பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் பொன்னப்பல்லி விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்த யானையை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர்.

அங்கிருந்து பாலூர், மாச்சம்பட்டு, ஓணாங்குட்டை கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை அப்பகுதியிலேயே தொடர்ந்து 4 நாட்களாக சுற்றி வந்து 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை சேதப்படுத்தியது. அதன்பிறகு, அங்கிருந்து வெளியேறிய யானை ரெட்டிக்கிணறு, சாரங்கல், பேரணாம்பட்டு பகுதியை யொட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிக்குள் நுழைந்தது.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றை யானை சாரங்கல் அடுத்த கத்தாழக்குழி மற்றும் அதைசுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. ஆம்பூர் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

இந்நிலையில், பொன்னப்பல்லி கிராமத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றை யானை அதேபகுதியைச் சேர்ந்த விவசாயி சாமைய்யா (62), மற்றும் விஜயன் (43) என்பவர்களின் விவசாய நிலத்தில் நுழைந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிர்களை சேதப்படுத்தியது. அதன்பிறகு அங்கிருந்து வெளியேறி அருகே தாமோதிரன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் நுழைந்து அங்கு 100 மரங்களை வேரோடு பிடிங்கி தும்சம் செய்தது.

கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை பிடிக்க ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையில் 3 குழுக்களாக பிரிந்த வனத்துறையினர் பொன்னப்பல்லி, ராலகொத்தூர், பைரப்பள்ளி ஆகிய இடங்களில் முகாமிட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஒற்றை யானையால் பாதிக்கப்பட்ட ஆம்பூர்,பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் மோடிக்குப்பம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

* விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வரும் காட்டு யானை கூட்டத்திடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மோர்தானா, செங்குன்றம் ஊராட்சிகளில் வனக்காடுகளை சுற்றிலும் ‘சூரிய சக்தி மின் வேலி’ அல்லது, ‘இன்ப்ராரெட்’ வேலியுடன் ‘சென்சார் கருவி’களை பொருத்தி காட்டை விட்டு வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடந்த 2 வாரங்களாக ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை ‘கும்கி யானைகளை’ கொண்டோ அல்லது ‘மயக்க ஊசி’ செலுத்தி பிடிக்க வேண்டும்.

* ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் செயல்படுவதை போல விவசாயிகள் தங்களது நிலங்களில் மட்டும் ‘சூரிய சக்தி மின் வேலி திட்டம்’ செயல்படுத்த 90 சதவீதம் மான்னியத்துடன் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு சூரிய சக்தி மின் வேலியை அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.

* காட்டு யானைகளால் சேதமடைந்த பயிர் வகைகளுக்கு அரசு உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மேற்கொண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டுள்ளதால் அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, வன விலங்குகளிடம் இருந்து விளைப்பொருட்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முன் அறிவிப்பு இன்றி விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்