புதுச்சேரியில் பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு நீண்ட நேரம் சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாகப் புகார்: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

By அ.முன்னடியான்

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு நீண்ட நேரம் சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (24). இவருக்கும் காலாப்பட்டை அடுத்த தமிழகப் பகுதியான செட்டி நகரைச் சேர்ந்த மீனவரான ராமு என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான வனிதா தலைப் பிரசவம் என்பதால், பெற்றோர் வீட்டில் தங்கி புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதனையில் காண்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.13) இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே வனிதாவை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்தவர்கள் அவருக்கு அனுமதிச் சீட்டு வழங்கவில்லை. இதனால் இரவு முழுவதும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் பகுதியில் வனிதா தங்கியிருந்தார்.

இன்று (ஏப்.14) விடுமுறை தினம் என்பதால் நீண்ட நேரமாக அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்து மருத்துவமனை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வயிற்று வலி அதிகமானதைத் தொடர்ந்து வனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த வனிதாவின் கணவர் ராமு மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால்தான் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகப் புகார் தெரிவித்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீஸார், மருத்துவ அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பணியில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். வனிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்