தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரத்தைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரத்தைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தொடர்ந்து தொற்று அதிகரித்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தைக் கடந்தது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சென்னையில் மட்டும் தினசரிபாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தும், உயிரிழப்பு 30-க்கும்அதிகமாகவும் பதிவானது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மேலும் குறைந்து வந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில் தினசரி தொற்று பாதிப்பு 450 என்ற நிலையில் இருந்தது. தினசரி உயிரிழப்பும் 4, 5 என்ற இருந்து வந்தது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்ததாலும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல்பிரச்சாரத்தில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப்பின்பற்றாமலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் 20-ஐக் கடந்துள்ளது. சென்னையில் மட்டும் தொற்று 2 ஆயிரத்தை கடந்துவிட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிவேகமாக அதிகரித்து வருவதால், ஏப்.10-ம்தேதி முதல் திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டும்பயன்படுத்த அனுமதி, பேருந்துகளில் மக்கள் நின்றுகொண்டு பயணிக்க தடை, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி, இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மேல் பங்கேற்க தடை, கடற்கரைக்கு செல்லத் தடை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு விதித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக எடுத்தது. பொதுமக்களும் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். இதனால் தொற்று குறைந்தது. கடந்த ஆண்டு 5 மாதங்களுக்கு பின்னரே தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தைத் தொட்டது.

ஆனால், தற்போது ஒரே மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு 450-ல்இருந்து 6,500 ஆயிரத்தை கடந்துவிட்டது. தினமும் பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கிறது. ஏற்கெனவே மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன.பொதுமக்கள் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததே தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும்.

மேலும், அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. கரோனா தொற்று குறித்துகடந்த ஆண்டு இருந்த அச்சம் தற்போது பொதுமக்களிடம் இல்லை.இதேநிலை தொடர்ந்தால் அடுத்த வாரத்தில் மகாராஷ்டிரா, டெல்லிபோல் தமிழகத்திலும் கரோனா தொற்று அதிகரிக்கும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, ஊரடங்கை அமல்படுத்திகட்டுப்பாடுகளை கடுமையாக்கினால் மட்டுமே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்