முதியோர், மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டம்: சென்னை காவல் துறை விரைவில் தொடக்கம்

By இ.ராமகிருஷ்ணன்

சாலையோரம் சுற்றித் திரியும் முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகம் வாங்கும் சிறுவர், சிறுமிகள் என ஆதரவற்ற நிலைமையில் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டத்தை சென்னை காவல் துறை விரைவில் தொடங்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. அப்போது, சென்னை காவல் துறையில் உள்ளூர் காவல் துறை, ஆயுதப்படை காவலர்கள் உட்பட 23,500 போலீஸார், 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 700 ஓய்வுபெற்ற காவலர்கள், துணை ராணுவத்தினர் உட்பட மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். தேர்தல் பணி தவிர பிற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை.

வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், தேர்தல் பணிக்காக பிற மாவட்டங்களுக்கு சென்றிருந்த போலீஸார் சென்னை திரும்பிவிட்டனர். இதையடுத்து, போலீஸார் தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

பொதுவாக, சட்டம், ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தவிர சமூக நலன் சார்ந்த சேவைகளிலும் போலீஸார் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, தேர்தலுக்கு பிறகு முதல் கட்டமாக ‘காவல் கரங்கள்’ எனும் திட்டத்தை சென்னை போலீஸார் தொடங்க உள்ளனர்.

இத்திட்டத்தின்படி, சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உள்ளனர். உடல் நலிவுற்று சாலையோரம் சுற்றித் திரியும் முதியவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது அல்லது காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்துவிடுவது போன்ற பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக சாலையோரம் அல்லது வீடுகளில் இருப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நிலையில் உயிரிழப்பவர்களை அடையாளம் கண்டு, உறவினர்களிம் ஒப்படைப்பது, யாரும் உரிமை கோராத சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது போன்ற பணிகளையும் தனியார் தொண்டு நிறுவனம், சமூக சேவை அமைப்பினருடன் இணைந்து போலீஸார் மேற்கொள்ள உள்ளனர்.

சாலையோரம் யாசகம் பெறும் சிறுவர், சிறுமிகளை மீட்டு, தொண்டு நிறுவனம் மூலம் அவர்களை படிக்கவைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட உள்ளனர்.

படித்துவிட்டு வேலை தேடுகிற, பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் இணைக்கப்பட உள்ளனர். இவர்களுடன் தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து, சங்கிலி தொடர்போல உதவிபுரிய செயலி ஒன்றையும் உருவாக்கி, அதன்மூலம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்.

உதவி தேவைப்படுவோர், அவர்களது விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை செயலியில் பதிவேற்றம் செய்து, அதன்மூலம் தகவல்களை ஒருங்கிணைத்து செயல்பட உள்ளனர். இதற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

``ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டம் சென்னை காவல் துறை சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைக்க உள்ளார்'' என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்