உழைத்து முன்னேற துணைபுரியாமல் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது: கோவில்பட்டி பிரச்சாரத்தில் சரத்குமார் கருத்து

By செய்திப்பிரிவு

பெண்கள் உழைத்து முன்னேற அரசு துணையாக இருக்க வேண்டுமே தவிர, இலவசமாக பணம் கொடுத்து ஏமாற்றக்கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம்வேட்பாளர் கதிரவனை ஆதரித்து நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

திராவிட இயக்கங்களுக்கு மாறாக, ஒரு புதிய மாற்றத்தை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்என்ற அடிப்படையில் நேர்மையானவர்கள், மக்களைப் பற்றி சிந்திப்பவர்கள் இணைந்திருக்கும் அணி தான் இந்த கூட்டணி.

எளியவருக்கும் வாய்ப்பு, பணமில்லா அரசியல் என்பது தான் எங்களது நோக்கம், பணம் இருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலை வந்தால், அது ஜனநாயகமாக இருக்க முடியாது. நாங்கள் இலவசத்தை எதிர்ப்பவர்கள் அல்ல. யாருக்கு இலவசம் கொடுக்க வேண்டும், எதற்காக கொடுக்க வேண்டும் என்பதை மட்டும்தான் நாங்கள் சொல்கிறோம்.

கரோனா 2-வது சுற்று வருகிறது என்று கூறுகின்றனர். இந்நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்ல முடியாது. மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, கிராமங்கள் தோறும் இலவசமாக வைஃபை வசதி செய்துகொடுக்க வேண்டும். லேப்டாப், வைஃபை இணைப்பு, ஸ்மார்ட் ஃபோன் போற்றவற்றை இலவசமாக தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இதுதான் தேவையான இலவசம்.

படித்த பெண்களுக்கு வீட்டிலிருந்தவாறே சுயதொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மற்றகட்சியினர் மாதம் பெண்களுக்கு ரூ.1,000 தருகிறோம், ரூ.1,500 தருகிறோம் என்று கூறி ஏமாற்றுகின்றனர். பணத்தைக் கொடுக்காமல், உழைத்து சம்பாதிப்பதற்கு வழிவகை செய்துகொடுத்தால் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக்கொள்வார்கள்.

உழைத்து முன்னேறுவதற்குத்தான் அரசு துணையாக இருக்கவேண்டுமேதவிர, இலவசமாக பணம் கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. வாக்குக்கு அரசியல் கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்காதீர்கள். அவையெல்லாம் கொள்ளையடித்த பணம். அதனால்தான் பணம் வாங்காதீர்கள் என்று உங்கள் அனைவரின் காலைதொட்டு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

30 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

32 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்