வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக கடந்த 2 வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் முதலில் கடலூர் மாவட்டமும் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீட்புப்பணியில் ராணுவத்தின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கடலோர காவல் படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்பு படை யினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்டனர். மீட்கப் பட்டவர்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை சற்று ஓய்ந்த தால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து, மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால், அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் நீடிக்கிறது

இந்நிலையில், இலங்கையை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளதால் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீட்புப் படை

ஏற்கெனவே பெய்த மழையின் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பது கடலோர மாவட்ட மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவம், கடலோர காவல் படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாங்குநேரியில் 7 செ.மீ. தூத்துக்குடி மாவட்டம் சங்கரி, அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், வேலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கிண்டி, பெரம்பூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, எண்ணூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மழை நீர் தேங்குவதும் வடிவதுமாக இருந்தது.

232 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் மழைக்கு இதுவரை 232 பேர் உயிரிழந் திருப்பதாகவும், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 53 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும், சென்னையில் 32 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும் உயிரிழந்திருப்பதாக காவல் துறை கணக்கெடுப்பில் தெரியவந் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்