நாகை மீனவர்களை சரமாரியாகத் தாக்கிய இலங்கைக் கடற்படை: ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்கள், ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றனர்

By தாயு.செந்தில்குமார்

வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்கள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி ஆகியவற்றை இலங்கைக் கடற்படையினர் எடுத்து சென்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (34), பைபர் படகு உரிமையாளர். இவருக்குச் சொந்தமான பைபர் படகில் முத்துக்குமரன், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (41), முருகன் (38), செல்வன் (37), சின்னதம்பி (36), சேகர் (30) ஆகிய 6 மீனவர்கள் நேற்று (22-ம் தேதி) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்குத் தென் கிழக்கே 13 நாட்டிகல் தொலைவில் இந்தியக் கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 2 இயந்திரப் படகுகளில் அங்கு வந்த 15 இலங்கைக் கடற்படையினர், பைபர் படகைச் சுற்றி வளைத்து படகில் ஏறினர். படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிக்க முயன்றனர். அதைத் தடுத்த செருதூர் மீனவர்களை சரமாரியாகத் தாக்கி, தண்ணீரில் தள்ளிவிட்டனர்.

பின்னர் படகில் இருந்து வலை, வாக்கிடாக்கி, ஜிபிஎஸ் கருவி மற்றும் ரூ.3லட்சம் மதிப்பிலான மீன்களை இலங்கைக் கடற்படையினர் எடுத்துக்கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அவ்வழியே வந்த நாகையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்களையும், பைபர் படகையும் காப்பாற்றி செருதூர் கடற்கரைக்கு இன்று காலை கொண்டுவந்து சேர்த்தனர்.

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர் கண்ணணுக்கு அதிமுக நகரச் செயலாளர் தங்க.கதிரவன் நேற்று ஆறுதல் கூறினார்.

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் ஆகியோரைச் சிகிச்சைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செருதூர் மீனவ கிராமப் பஞ்சாயத்தார் கொடுத்த தகவலின்பேரில் கீழையூர் கடலோரக் காவல் குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த மீனவர் கண்ணனை அதிமுக நகரச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான தங்க.கதிரவன் நேரில் சந்தித்து நடந்த விவரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பும் வெள்ளப்பள்ளம் மீனவர்களைத் தாக்கி அவர்களிடம் இருந்த மீன்களையும், ஜிபிஎஸ் கருவியையும் இலங்கைக் கடற்படையினர் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

இந்தியா

14 mins ago

சுற்றுலா

38 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்