பாம்பு, பல்லிகள் விஷத்தை விட  பெரிய விஷமான துரோகம் செய்தவர் முதல்வர் பழனிசாமி: தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கடும் சாடல்

By செய்திப்பிரிவு


ஊர்ந்து செல்வதற்கு நான் பாம்பா, பல்லியா’ என்று கேட்கும் பழனிசாமி, அவற்றின் விஷத்தை விடப் பெரிய விஷமான துரோகத்தைச் செய்தவர் முதல்வர் பழனிசாமி என நெல்லையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி தொகுதியில், நம்முடைய கழகத்தின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ஏ.எல்.எஸ். இலட்சுமணன் உதயசூரியன் சின்னத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராக இருந்தவர் - மூத்த வழக்கறிஞரான இரா.ஆவுடையப்பன் உதயசூரியன் சின்னத்திலும், பாளையங்கோட்டை தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் அருமை சகோதரர் அப்துல் வகாப் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அப்பாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்திலும் ஆதரவு தர வேண்டுமென்று என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.

திக்கெட்டும் புகழ் பரப்பும் நெல்லைச் சீமைக்கு கலைஞரின் மகனாக, வந்திருக்கிறேன். வீரத்திற்கு பூலித்தேவன், கல்விக்கு பாளையங்கோட்டை, ஆன்மீகத்திற்கு நெல்லையப்பர் என்று அனைத்து சிறப்பையும் பெற்றிருக்கும் இந்த நெல்லைச் சீமைக்கு கருணாநிதியின் மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு, அவர் எவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் கோபம் வந்துவிடும். அவரைப்பற்றி நான் மட்டுமல்ல எல்லோரும் பேசியிருக்கிறார்கள். பேசியது மட்டுமல்ல, வலைதளங்களில் பார்த்திருக்கிறார்கள்,

தவழ்ந்து… ஊர்ந்து… சசிகலாவால் முதல்வர் ஆனார் என்பதை நான் பல கூட்டங்களில் சொன்னேன். அதை நான் அவமானப்படுத்துவதற்காக சொன்னேன் என்று அவரும் நினைக்கவேண்டாம். நீங்களும் நினைக்க வேண்டாம். நடந்த செய்தியைச் சொன்னேன்.

ஆனால் அவருக்கு கோபம் வந்து விட்டது. அதற்கு அவர் நான் சசிகலாவால் முதல்வராகவில்லை. எம்.எல்.ஏ.க்களால் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று சொல்லி உள்ளார்.

அதற்கு நான் விளக்கமாகவும் சொன்னேன். நீங்கள் சசிகலாவின் தயவில்தான் முதல்வர் பதவியை வாங்கினீர்கள் என்று சொன்னேன். நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? முதலில் அதை சொல்லுங்கள். நீங்கள் தவழ்ந்து போனது உண்மையா? இல்லையா? அதை சொல்லுங்கள்.

நான் மட்டுமா பார்த்தேன். இந்த நாடே அதைப் பார்த்து சிரித்தது. அதை நான் தவறாக சொல்லியிருந்தால் பழனிசாமி அவர்களே என் மீது வழக்குப் போடுங்கள். என் மீது மட்டுமல்ல, அதைப் பார்த்த அனைவர் மீதும் நீங்கள் வழக்கு போடுங்கள். உங்களுக்கு முதலில் அதற்கு தைரியம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

இப்போது திடீரென்று அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து போவதற்கு என்று சொல்லியிருக்கிறார். அவர் விஷப்பல்லி… விஷப்பாம்பு…

பாம்பு, பல்லிகளின் விஷத்தை விட துரோகம் தான் பெரிய விஷம். அந்த துரோகத்தை செய்தவர்தான் பழனிசாமி. யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். அம்மையார் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர். இப்போது அதிமுகவிற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் இப்போது அதிமுக என்பது பாஜகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு கேட்டு ஒரு அடிமையாக இருக்கிறார். இப்படி ஒரு அக்கிரமமான ஆட்சியை, அடிமைத்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்தான் பழனிச்சாமி.

இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போட்ட தேசத்துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இதுவரை வாபஸ் வாங்கவில்லை.

உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இல்லை. 2011 முதல் இந்த பகுதியையே ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் அல்ல.

இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் விண்ணை முட்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆட்சியும் மத்திய அரசும் கவலைப்படவில்லை.

இந்த நிலையை விட மோசமானது என்னவென்றால் ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை வழங்கி மக்கள் தலைகளில் கட்டவேண்டும் எனக் கட்டாயப்படுத்திச் செய்வதுதான். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி, இன்றைக்கு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி எந்த அளவிற்கு மோசமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உதாரணமே போதும்.


இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

சினிமா

31 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்